08.20.08

யோகா குருக்களின் மாயா லோகம்

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் tagged , , , , , , , , , இல் 11:33 மாலை by பொதுசனம்

யோகா குருக்களின் மாயா லோகம்
ஆர். பிரேம்குமார்

“ ‘ஆத்ம யோகத்தின்’மூலம் நோயைக் குணமாக்குவார் என்று உறவினர் கூறியதையடுத்து கணவனுக்கு சிகிச்சை பெற ஆஸ்ரமத்துக்குச் சென்ற பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற ஆஸ்ரம நிர்வாகி சுரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்…” கடை வராந்தாவில் உட்கார்ந்து பக்கத்தில் நிற்பவர் செவிகளில் விழும்படி பேப்பர் படித்துக் கொண்டிருந்த தங்கப்பனை அதட்டியபடி வந்தார் சொக்கலிங்கம்.

“என்ன நீட்டி முழக்கிப் படிக்கிறே… அது வேற முந்தா நாளுப் பேப்பரு…! உனக்கென்ன யோகின்னா ரொம்ப நிசாரமாகப் போச்சோ? யோகா பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? முன்னே பின்னே யோகா பண்ணி இருக்கியா?”

“கோபப்படாதீங்க சொக்கண்ணே… எனக்கு என்னண்ணே யோகா பற்றித் தெரியும்? ஏதோ பேப்பரில் செய்தி போட்டிருக்கான்… மார்ச் மாசம் 21ம் தேதி செய்தி… நம்ம ஊருக்குப் பக்கத்து ஊரிலதான் நடந்திருக்கு… அதான் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன்…!”

“இப்பதான் ஊருக்கு ஊரு மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கில்லே… அதான் எங்கே பார்த்தாலும் யோகா சொல்லிக் கொடுக்கிறாங்க… அதில ஒன்றிரண்டு பேரு தப்புத் தண்டா பண்ணினா, ‘குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் மூத்தவனும் உதவாது’ என்கிற மாதிரி பேசுறதா? கண்டுக்காமப் போக வேண்டியதுதானே…!”

சொக்கலிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் கடைக்காரர் நாராயணன் சிரித்து விட்டார். “என்ன, சொக்கண்ணே, இப்படிச் சொல்லிட்டீங்க! நானும் தான் ஊரு உலகத்தில யோகா பற்றி விளம்பரங்கள் வரத்தொடங்கின காலத்தில் இருந்தே பேப்பர் படிச்சிட்டிருக்கேன். ஒரு பேப்பருக்கு நாலு பேப்பர் வாசிக்கிறேன்… காலம் காலமாக யோகாசனத்தின் மகிமை பற்றிப் பேசுகிற மர்மயோகிகள் பற்றி வெட்கப்பட வைக்கிற செய்திகள்தான் அதிகம் வருது… கூர்ந்து கவனிச்சீங்கன்னா தெரியும்…!”

சொக்கலிங்கத்துக்கு கோபம் வந்தது. “அப்படி எல்லாம் கிடையாது! அதெல்லாம் திட்டமிட்டச் சதி!”

“யாருண்ணே யாருக்கு எதிராகச் சதி செய்றாங்க? கொஞ்சம் புரியம்படியாச் சொல்லுங்களேன்…” தங்கப்பன் கெஞ்சுகிற பாவனையில் கேட்டார்.

“நம்ம பாரதக் கலாச்சாரத்தின் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து யோகிகள் மேல அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள்! கொஞ்ச நாள் முன்னாடி கூட, பிருந்தா காரட் என்றொரு பொம்பளை கம்யூனிஸ்ட் சுவாமி பாபா ராம்தேவ் மேல பொய்க் கேசு போட்டிருக்கு… பாபா ராம்தேவ் எப்படிபட்ட ஆள் தெரியுமா? வாரணாசியில் யோகா ஆசிரமம் வைத்து ஆயுர்வேத மருந்து தயாரிக்கிறார்… வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்… அவருடைய சொத்து மதிப்பு 100கோடியைத் தாண்டும் என்கிறார்கள்… அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் தினமும் 7 கோடி பேருக்கு டி.வி. சேனல்கள் மூலம் யோகா கற்றுத் தருகிறார்… நடிகர்கள் வாறாங்க-கிரிக்கெட் வீரர்கள் வாறாங்க – அரசியல்வாதிகள் வாறாங்க… எல்லோரையும் ஆசிர்வதிக்கிறார். அப்படிப்பட்ட யோகி மேல குற்றச்சாட்டுன்னா பூமி பொறுக்குமா?”

“ஆத்திரப்படாதீங்க சொக்கண்ணே… இப்ப நான் பேசல்லேன்னா ‘தட்டிப் பேச ஆளிள்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்கிறது மாதிரி ஆயிடும். அந்தம்மா இருக்காங்களே, பிருந்தா காரட், அவங்ககிட்ட பாபா ராம்தேவோட ‘திவ்ய யோகா பார்மசியில்’ இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 112 தொழிலாளர்கள் போய் முறையிட்டாங்க. அந்தத் தொழிலார்கள்தான், ஆயுர்வேத மருந்தில் எலும்புத் துண்டுகளைச் சேர்க்கிறாரு; எலும்புத் துண்டுகளைக் கையாள முடியாது என்கிறதால வேலையை விட்டு நீக்கிட்டாரு என்று அவர்மேல் குற்றம் சாட்டினார்கள். பிருந்தா காரட் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; அதோடு கூட, ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் விலங்கு மற்றும் மனித எலும்புகள் சேர்ப்பது பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறினார். சர்ச்சை உருவான உடனேயே உத்தராஞ்சால் மாநிலத்தின் தொழிலாளர் அமைச்சகம் திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளைக்கு குறைந்த பட்ச ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ‘குலியா பஸ்பம்’ என்ற வலிப்பு நோய் மருந்தும், ‘யவ்வனாம்ருதி பதி’ என்ற ஆண்மை வீரிய மருந்தும் ‘ஆயுஸ்’ (AYUSH) ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்த, ஹோமியோபதி) ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில் விலங்கினத் துணுக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது… உண்மை இப்படி இருக்க, நீங்க ‘தீவட்டக்காரனுக்கு கண் தெரியாது’ என்கிற மாதிரி பேசினா எப்படி?”

“கடைக்காரரே… நீங்க பேசுறதில உள்ள நியாயத்தை ஒத்துக்கிறேன். ஆனா பாபா ராம்தேவ் சாதாரண மக்களும் கடை பிடிக்கிற மாதிரி பிரணயாமம் சொல்லிக் கொடுக்கிறதைப் பார்த்திருக்கிறீரா…”

“சொக்கண்ணே, நீங்க பார்த்திருங்கீங்களா…?” திடீர் எனத் தங்கப்பன் கேட்டார். சொக்கலிங்கத்துக்கு தர்ம சங்கடமாகி விட்டது என்றாலும் சாமாளித்தார்.

“நமக்கெல்லாம் அதெல்லாம் பார்க்க எங்கே நேரம் இருக்கு? எதாயிருந்தாலும் இன்னும் 5 வருடங்களில் சுமார் 10 கோடிப்பேர் டி.வி. பார்த்து யோகாசனம் செஞ்சு நோய் நொடிகளிலிருந்து விடுபடுவார்கள் என்று சொல்கிறார். இது நல்ல விஷயம் இல்லையா?”

“இந்தியாவில் சொந்தமா டி.வி. உள்ளவங்ளே 10 கோடிப்பேர் தேறுவாங்களா என்பது சந்தேகம்…! சொக்கண்ணே… இந்த யோகாசனம் என்கிறது ‘டு மினிட்ஸ் நூடில்ஸ்’ மாதிரிப்பட்ட சமாச்சாரம் இல்லை. . ! ஆனா இப்ப சில ‘உலகமயமாகிவிட்ட’ குருக்கள் தாங்களே ஸ்பெஷலா ஒரு ஸ்டைலை அறிமுகம் செய்கிறாங்க… தெருவுக்குத் தெரு ஒரு கராத்தே கிளப் இருக்கிற மாதிரிதான் யோகா படிப்பகங்களும் அமைஞ்சிருக்கு… அதான் நாகர்கோவிலில் ஒருவர் ‘ஆத்மயோகம்’ மூலம் அற்புதம் செய்கிறார் என்றால் ராம்தேவ் ‘பிரணாயாமம்’ என்கிறார்… ரவிசங்கர் ‘சுதர்ஸன கிரியா’ என்கிறார்… பலயோகேஸ்வரர், ‘நான் உடல் சார்ந்த யோகத்தை (ஹத்த யோகா) அல்ல; மனம் சார்ந்த (ராஜ யோகா) யோகத்தினைப் போதிக்கிறேன் என்கிறார்; ரஜனீஷ் ‘தியான யோகாவை’ கடை பிடிப்பதாகக் கூறுகிறார்; மகிரிஷி மகேஷ் யோகி ‘ஆழ்நிலை தியான முறையை’ (Transcendental Meditation) உலகமெங்கும் பரப்பி வருகிறார்…”

“அட நாராயணா… நீங்களும் பேசாம ஒரு யோகா ஸ்டைல் தொடங்கிடலாம் போலிருக்கே…” தங்கப்பன் வியப்புடன் கேட்டார்.

“யோகசனம் படிக்கிறது என்கிறது பறையாட்டம் படிக்கிறது மாதிரி கண்ணும் கருத்துமா படிக்க வேண்டிய விஷயம். தொடர்ந்து பயிற்சி செய்தால் உடம்பை ரப்பராக வளைக்கவும், பலூனாக மாற்றவும் முடியும். ஜிம்னாஸ்டிக்ஸ், சர்க்கஸ் போன்ற கலைகளில் ஈடுபாடு உள்ளவர்களும் பல தினுசுகளில் உடம்பை வளைக்கிறாங்க. படிப்பும், ஊளைச் சதையும் வாய்க்கப் பெறாத கழைக் கூத்தாடிகளும் உடம்பை வளைச்சு தெளிக்கத்தான் செய்றாங்க. அதனால உடம்பை காட்டி வித்தை காட்டுறது யோகா படிச்சவங்க மட்டும் தான் செய்ய முடியும்னு இல்லை… ஆனா, என்ன, இந்த குருக்களெல்லாம் உடம்பை வச்சு வித்தை காட்டினாலும், அதுக்கு மேல், ‘ஆன்மாவின் பேரானந்தம்’ என்று தத்துவச் சரடு விடுகிறார்! ‘இப்படி எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக கஷ்டப்பட்டு வாழ்வது எதற்காக’ என்று கோடிக்கணக்கான ஏழைகள் குமுறிக் கொண்டு இருக்கும்போது ‘வாழும் கலை’பற்றி வகுப்புகள் நடக்கிற நாடு இது என்பதுதான் வேடிக்கை. ..!” நாராயணன் ஏக்கப் பெருமூச்சுடன் பேச்சை நிறுத்தினார். அப்போது யாரோ கடையில் பொருள் வாங்க வரக் கவனம் அவர்பால் திரும்பியது. அந்த நேரம் பார்த்து சொக்கலிங்கம் கிசுகிசுத்தக் குரலில் தங்கப்பனிடம் சொன்னார்:

“தங்கப்பா, நம்ம ஊரில சில பேரு மகான்களைப் பற்றிச் சரியா புரிஞ்சுக்காமப் பேசறாங்க… வறுமை பெருசு இல்லை; மனநிம்மதி தான் பெருசு! அதைப் புரிஞ்சுகிட்டதாலதான் 144 நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் கடந்த பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தினங்களில் பெங்களூர் அருகே உள்ள ஜக்கூர் விமானத்தளத்தில் சங்கமித்து இருக்கிறார்கள். அங்கே நடந்த மகான் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 50வது பிறந்தநாள் விழாவும், அவரது ‘வாழும் கலை அமைப்பின்’ (Art of Living) வெள்ளி விழாவும் பெங்களூரையே ஒரு ஆன்மீக நகரமாக மாற்றிவிட்டது தெரியுமா? நமது ஜனாதிபதி, வாஜ்பேயி, அத்வானி உட்பட பல மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏறுமடைக்கு நீர் பாய்ச்சுவது போல, இந்தக் கடைக்காரரைப் போலச் சில பேருக்கு என்ன சொன்னாலும் புத்தி வராது…!”

நாராயணன் திரும்பிக் கொண்டார். “அண்ணே… நீங்க சொன்னது காதில விழுந்தது. ‘ஏறுகிறவன் இடுப்பை எவ்வளவு தூரம் தாங்கலாம்ணே?’ குருக்கள் எல்லாம் இப்படி படைபலம் திரட்டிக் காண்பிக்கிறதாலதான் சில அரசியல் தலைவர்கள் ‘அருள்வாக்கு’கேட்கும் சாக்கில் ‘வாக்கு’சேகரிக்க ஆஜராகி விடுகிறார்கள். இந்தியாவில் கூட்டம் சேர்க்கிறது பெரிய விஷயமில்லை அண்ணே… ஆனா கூட்டத்தில் பெரும் பகுதி விமானத்திலயும், சொகுசு கார்களிலும் பயணம் செய்து வந்தவங்க என்பதை மறந்து விட்டுப் போகக்கூடாது. ஆந்திராவில் காடுப் பிரதேசங்களில் சட்டையணியாமல் நின்று கத்தார் என்கிற இசைக் கலைஞன் பாடுவதைக் கேட்க கட்டை வண்டிகளிலும் கால்நடையுமாக இலட்சத்துக்கும் மேல் மக்கள் கூடி விடுகிறார்கள்; கோல்கட்டாவில் ஜோதிபாசு பேசுகிறார் என்றால் கூட்டம் பல லட்சத்தைத் தாண்டி விடுகிறது. இதையும் நாம மனசுல வச்சுகிட்டுப் பேசணும். சொக்கண்ணே 25 லட்சம் என்று சொன்னதெல்லாம் தலையெண்ணுவதில் உள்ள தப்புக் கணக்கு. ஆன்மீகம் பேசுறவங்க கணக்கில வீக்காகிப் போயிடறாங்க… அதுசரி; ஆன்மீக ஜோதியில் கரைய வேண்டி ஆயிரக்கணக்கில் வந்து இறங்கின வெளிநாட்டுப் பக்தர்கள் எல்லோரும் உண்மையிலேயே யோகாசனத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்கள்தானா? அவர்களில் சிலரது வருகையிலாவது உள்நோக்கம் எதுவும் இல்லையா? கோவாவிலும் கோவளத்திலும் சுற்றியலையும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் கந்தல் கோலமும் கசங்கிய விழிகளுமாய் காட்சியளிப்பது அவர்கள் பாரதத்தின் இயற்கை அழகை ரசித்துப் பருகியதால் மட்டும் தான் என்று சொல்வதை ‘நம்புவது’ போல்தான் பக்தி மார்க்கம் தேடி இந்தியாவுக்குள் நுழைபவர்களையும் கருத வேண்டு உள்ளது என்பது என் அபிப்ராயம்… இன்னொரு கேள்வி, சொக்கண்ணே… கடல் தாண்டிப் போவது கலாச்சாரத்துக்கு எதிரானது என்று காந்தியடிகளுக்கே தடை விதித்த கதை கேட்ட ஞாபகம் இருக்கு! அப்போ நம் குருக்கள் கடல் தாண்டிப் போவதும் வருவதும் எப்படி நியாயம்?”

‘காலத்திற்கேற்ப மாறணும். மகேஷ்யோகி 1970களில் உலகமெங்கும் ஆழ்நிலைத் தியானம் பற்றிப் பறந்து பறந்து பயிற்சி அளித்தார். அதனால் உலகம் எங்கும் அவருக்குச் சீடர்கள் உருவானார்கள். ‘குரு தட்சணை’ கோடிக் கணக்கில் வசூல் ஆனது. அதனால் அவரால் அமெரிக்காவிலேயே ஒரு பழைய விமானத் தளத்தை விலைக்கு வாங்க முடிந்தது. அவரைப் பின்பற்றி, அவருடைய பிரதான சீடராய் முதலில் இருந்த ரவிசங்கர் பெங்களூருக்கு அருகில் 60ஏக்கர் பரப்பளவில் ‘வேத விஞ்ஞான மகாவித்யா பீடத்தை’அமைத்து இருக்கிறார். இதற்கு எல்லாம் பெரும் செலவு ஆகிறது. அதற்கு வெளிநாட்டிலிருந்து டாலர்களில் தட்சணை செலுத்துகிற பக்தர்கள் இருந்தால் தான் ஈடுகட்ட முடியும்…! எல்லாமே உலகமயமாகும் போது யோகா மட்டும் விதிவிலக்கா, என்ன?”

கடைக்காரர் குறுக்கிட்டார். “நீங்க சொல்றதில ஒரு சின்னத் திருத்தம் அண்ணே… எல்லாமே விலைக்கு விற்கப்படும் போது யோகா மட்டும் விதிவிலக்கா என்ன?… இப்படி யோகாவை விற்றுக் காசாக்குவது பற்றி உண்மையிலேயே யோகாசன நிபுணர்களாய் இருக்கின்ற பலரும் கவலை தெரிவிக்கின்றனர்… ‘இலவச அறிமுக உரை’ என்று வெற்றிலை-பாக்கு வைத்துக் கூப்பிடுகிறார்கள். சரி; என்னதான் நடக்கிறது என்று அரங்கத்துக்கு உள்ளே சென்று உட்கார்ந்தால், நகரத்தில் வாளிப்பான உடல்வாகும், வளம் கொழிக்கும் வாழ்வும் உள்ள ஒன்றிரண்டு பேர் அறிமுக உரையில், “இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பயன் இல்லாதது; இனிமேல்தான் பயனுள்ள வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்” என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஒரு விதமாக மனதைப் பதப்படுத்துதல் (Conditioning) நடைபெறுகிறது. பிறகு இதற்கு முந்தையப் பயிற்சியில் பங்கு பெற்று ‘பங்கு பெற்றோர்’ ஒன்றிரண்டு பேர் சிரித்துச் சிரித்துப் பேசுகின்றனர்… சற்றும் தாமதிக்கமால் ஒருவர் எழுந்து, 16 நாட்கள் தினசரி 2 மணி நேரம் வைத்து யோகா வகுப்பில் கலந்து கொண்டதனால் எனக்கு ஆஸ்த்மா குணமாச்சு என்பார்; வேறொருவர் எழுந்து எனக்கு இரத்த அழுத்தம் குறைந்தது என்பார்; வேறொருவர் எனக்கு முதுகு வலி போயே போச்சு என்பார்… யாரும் எனக்கு டி.பி.இருக்கு; கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வருகிறது என்று சொல்லி கைக்குட்டை வைத்து வாயை மூடாமல் நான்கு முறை இருமுவது இல்லை. இந்தியாவிலேயே அதிகப்பேரைப் பாதித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள் யாரும் யோகா வகுப்பில் வந்து சாட்சி சொல்வதில்லை!

சாட்சியங்கள் முடிவதற்குள்ளாகவே நமது கரங்களில் ஒரு விண்ணப்பப் படிவம் இருக்கும். “இன்றைக்கு 500ரூபாய் கொடுத்துச் சேர முடியாதவர்கள் பயிற்சி துவங்கும் நாளன்று ரூபாய் கொண்டு வந்தால் போதும்! எல்லோரும் நிரப்பின விண்ணப்பப் படிவங்களை உங்களருகே (பவ்வியமாக, புன் சிரித்தபடி…) வந்து கை நீட்டும் வாலண்டியரிடம் கொடுத்து விடுங்கள்! நாங்கள் தொடர்பு கொள்வோம்!” என்று நளினமாக குரலில் ஒருவர் அறிவிப்பார். தேர்ந்தெடுத்த சொற்களிலான வியாபாரப் பேச்சு…! படிவம் நிரப்பிக் கொடுக்காமல் அரங்கத்தை விட்டு வெளியேறுவது தர்ம சங்கடத்தை உருவாக்கி விடும். 30 பார்வையாளர்களில் ஒரு ஆளை வாடிக்கையாளர் ஆக்கிவிடலாம் என்பது ஒரு கணக்கு…

எல்லாமே ஒரு வித ‘சங்கிலித் தொடர் விற்பனை’ (Multi-level Marketing) மாதிரித் தோன்றுகிறது…!

“நாராயணா… ரொம்ப வெறுத்துப் போய் பேசாதீங்க… ஆளு சேர்க்கிறதுன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்… 500 ரூபாய் போனால் என்ன…? தீரா வினை தீர்ந்திடுச்சுன்னா சந்தோஷம்தானே…!” அப்பாவியாய் கேட்டார் தங்கப்பன். “தங்கப்பா, யோகா பயிற்சி பண்றதினாலே சில உடல்நலக் கோளாறுகள் கட்டுப்படுது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அது ஒரு ‘இணை சிகிச்சை முறை’ (complimentary). எடுத்துக்காட்டாக சர்க்கரை நோய் இன்சுலின் என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்டது; ஆஸ்த்மா நுரையீரல்களின் மூச்சுக் குழாய்கள் வீக்கமடைவது சம்பந்தப்பட்டது. இரத்த அழுத்தம், மலச்சிக்கல் போன்றவை மனநிலை சார்ந்த பிரச்சனைகள்… இன்னும் சொல்லப் போனால் உயிருக்கு ஆபத்து எற்படுத்தும் நுண்ணுயிரித் தாக்குதல் இல்லாத உடல் பலவீனங்களை மனசை உற்சாகப் படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்… யோகா பயிற்சிக் கூடங்கள் சில ஒழுக்கங்களை (!) வலியுறுத்துகின்றன…!

சாதாரண கதியில் சிகரெட் இழுப்பதை கைவிட முடியாத சிலர், யோகா வகுப்பில் சேர வேண்டுமானால் பழக்கத்தை நிறுத்தி விட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுவும் உடல் இயங்கியலில் கண்ணியமான மாற்றத்தைக் கொண்டு வரும்! ஆனால் உலகம் முழுவதும் பெருவாரியான மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கும், நொறுக்குத் தீனிகளை மேய்ந்து, உடல் உப்பி, நோய்களின் வாழ்விடமாய் உடலென்னும் ஆலயத்தை மாற்றுவதற்கும் காரணமான ‘சுரண்டல்’ பற்றி இந்தக் குருக்கள் வாய் திறப்பது இல்லை! உலகமெங்கும் கிளைகள் திறக்கும் யோகா விற்பனர்கள் சோமாலியா மாதிரி நாட்டில் என்ன செய்ய முடியும்? ஒரு வேளை அங்கே ஒரு கிளை துவங்கினால் அதிலும் ஆளும் வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கமும்தான் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம் எதுவும் இருக்கப் போவது இல்லை!”

“நாராயணன்… நீங்க ஓவராய் பேசறீங்க! யோகாவால நன்மைகள் இருக்குது என்கிறீங்க. அனால் குருக்கள் வழி காட்டுதலில் கட்டணம் வசூலித்து நடத்தப்படும் யோகா வகுப்புகளில் வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும் என்கிறீங்க…!” கோபத்தோடு குறுக்கிட்டார் சொக்கலிங்கம்.

“ஆத்திரப்படாதீங்க…! இந்த நாட்டில வசதி இல்லாதவங்க என்கிறது பணத்தைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கப்படுறது இல்லை. எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் நீங்கள் ஒரு தலித் என்றால் ஒரு மக்கள் அரங்கத்தில் உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பின் அடிநாதமாக முணு முணுப்புகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். ரவிசங்கரிடம் தலித்துகள் பற்றிக் கேட்டால் “அது பற்றி யாம் ஒரு நூல் இயற்றியுள்ளோம் (Heritage of Dalits). அதில் நிறைய முனிவர்கள் தலித்துகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டது பற்றி எழுதி உள்ளோம். அந்த உண்மைகள் மக்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது அம்பேத்கர் மட்டும்தான்… வேறு ஒரு மதத்துக்கு மாறிச் செல்வது எளிது. அப்படிப் போனால், ‘படிக்க’வேண்டியவர்களுக்கு ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிய பாடத்தைக் கற்பிக்க முடியாது. ஆனால் நீங்கள் நிலைத்து நின்று மக்களை மாறச் செய்ய வேண்டுமானால் உங்களிடையே வித்தியாசமான ‘போர்க்குணம்’ இருக்க வேண்டும். ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டும்; உரிமைகளுக்காகப் போராட வேண்டும்…” என்று பேசுகிறார். அவரது பேச்சிலிருந்து அடக்கு முறைகளைச் சகித்துக் கொண்டு தலித்துகள் வாழ்கின்ற காலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கணிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

“ரவிசங்கர் உயர் ஜாதியில் பிறந்ததனால் அவருடையப் பேச்சை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டும்போது ஓர் உள்நோக்கம் பொதிந்திருக்கிறது என்று தோன்கிறது. ஆனால் யாதவ குலத்தில் பிறந்த ஒரு சாதாரண விவசாயியின் மகன்தானே ராம்தேவ்… அவரையும் குற்றம் சாட்டித்தானே பேசுகிறீர்கள்?”

“நான் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வரவில்லை… ஒவ்வொரு யோகியும் கொடுக்கிற ‘போஸ்’பார்த்திருக்கிறீங்களா? இந்த ஃபோட்டோவில் தெரிகிற மாதிரி காந்த விழிகளும், களையான முகமும், அலைபாயும் சிகையலங்காரமும் நேரில் பார்த்தால் தெரிவது இல்லை. ஆனால் அருகில் அண்டவிடாத பாதுகாப்பு வளையம்தான் இவர்களது புனிதத்தையும், கடவுளின் அவதார உருவம் என்ற கட்டுக் கதையையும் கட்டிக் காக்கிறது.

அவர்களுடைய பேச்சின் ஒழுக்கில் சக்தி மண்டலங்கள் (Energy Fields), சக்தி ஊடுருவல்கள் (Energy Flows), சக்திக் கற்றைகள் (Energy Blocks), தீர்க்க ரேகைகள் (Meridians), விசைகள் (Forces), நறுமணங்கள் (Auras), சந்த நயங்கள் (Rhythms) என்ற ஆங்கில வார்த்தைகள் அவற்றின் வழக்கமான அர்த்ததிலிருந்து வழுவி மொழியின் மாறுபட்ட உச்சரிப்புகளாலும், ஜன்னி வெட்டி மேற்சொருகும் கண்களின் உடல் மொழியாலும் ஒரு மர்மக் குகையில் இருப்பது போன்ற உணர்வை வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தி விடும்…

‘கடவுள் ஒரு பிரச்சனை அல்ல; ஒரு தீர்வும் அல்ல’ என்று சொல்வதைக் கேட்டு அமைதியாக தலையாட்டும் நாற்காலிப் பட்டாளம். இந்த சொற்றொடரின் பொருள் என்ன என்று யாராவது கூட்டத்தில் எழும்பி நின்று கேட்டால் வெளியே போகவேண்டியதுதான்.

இதெல்லாம் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாது என்பது ‘ஆன்மீக அராஜகம்’அல்லவா?

“நாராயணன்… நீங்க விபரமான ஆளாத்தான் இருக்கிறீங்க. நம்ம நாட்டில எல்லா வித மத நம்பிக்கை உள்ளவங்களும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற மதச்சார்பற்ற சிந்தனையோடு, உலக சமாதானம் பேசி ‘உலக மனிதாபிமானி’ விருது கூடப் பெற்றவர் ஸ்ரீஸ்ரீ என்பதை மறந்துவிடாதீங்க…!”

“குருக்கள் தங்கள் பெயரில் நடக்கும் இயக்கங்களுக்கு ஆள் திரட்ட வேண்டியே ‘எம்மதமும் சம்மதம்’என்கிற ரீதியிலே பேசுகின்றனர். “உலகம் முழுவதும் இந்து தர்மத்தையும், பாரதத்தின் சிறப்பையும் பறைசாற்றி வரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இந்து தர்மத்துக்கு எதிராக மாற்று மதத்தினரும், அதிகார வர்க்கமும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உறுதியாகக் கண்டித்து வருகிறார். மசூதி, சர்ச்சுகளின பணம் அவர்களின் மதப்பணிக்காகப் பயன்படும் போது இந்து ஆலயங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அரசிடம் சேர்வது எப்படி நியாயம் என்று கேட்கிறார். மதமாற்றத்தைக் கண்டித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார்” என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழ் ஒன்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருப்பதை வாசிச்சிருக்கீங்களா..”

சொக்கலிங்கம் பதில் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு நின்றார். தங்கப்பன் தெண்டையை இருமிக் கொண்டு கடைசியாய் ஒரு கேள்வி என்ற தொனியில் கேட்டார்.

“கடைக்காரரே… இவ்வளவு பேசறீங்களே… நீங்க எப்பவாவது வாழ்கிற கலை பற்றி படிக்கப் போயிருக்கீங்களா?”

“அதெப்படி போகாம இருக்க முடியும்?… 500 ரூபாய் கட்டுற வசதி உள்ள ஆள்னு அறிஞ்சா விட்டு வைப்பாங்களா? என்னுடைய கணக்கு உள்ள பாங்கில் வேலை பார்க்கிற ஒருத்தரு என்னையும் கூட்டிட்டுப் போனரு… டவுனுக்கு நடுவில இருக்கிற திருமண மண்டபத்துல மேல் மாடியில வச்சு அறிமுக உரை. சில பேர் குடும்பத்தோட வந்திருந்தாங்க. கூட்டம் துவங்குறதுக்கு முன்னாடி அமைதியானச் சூழலை உருவாக்கணும் என்கிறதுக்காக குழந்தைகளை சிறிது நேரம் அரங்கத்துக்கு கீழே காவலாளி பொறுப்பில் விளையாட விட்டுட்டாங்க… மாடிக்குப் போற ஒரே கதவையும் ஜன்னல்களையும் அடைச்சிட்டாங்க… முற்றிலும் நிசப்தம்! அரங்கத்தின் முன், மேடையில் விலை உயர்ந்தக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.

அறிமுக உரை நிகழ்த்துபவர் 120அடி கிணற்றில் விழுந்தவர் பேசினால் என்ன தொனி வருமோ அந்த தொனியில் பேசத் துவங்கினார்… 5 நிமிடம் ஆகி இருக்கும்… திடீரென மேடையில் புகை படர்ந்தது… ஒரு நிமிடம் யாருக்கும் எதுவும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது. கம்பளத்தின் அடியில் கிடக்கும் மின்சார வயர்களிலிருந்து மின்சாரம் கசிந்து கம்பளம் தீ பற்றுகிறது என்று… மக்கள் திகைத்துப் போய் வாசலை நோக்கி ஓடினார்கள்… ஏதோ ஒரு சுட்டிக் குழந்தை வாசல் வெளியிலிருந்து தாழ்ப்பாள் போட்டிருக்கிறது போலும்… ஒரே கூச்சல்..!

என் நண்பர் என்னைப் பார்த்தார்… நான் எம்பிச் சாடினால் எட்டும் உயரத்தில் இருந்த ஜன்னலைப் பார்த்தேன். அவரிடம் கேட்டேன்: “என்னை அறிமுகக் கூட்டத்துக்கு அழைத்து வரும்போது என்ன சொன்னீர்கள்…? இதுவரை நான் வாழ்ந்த 40 வருடங்களும் வேஸ்ட். பாதி வாழ்க்கையை வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க; மீதி உள்ள பாதியையாவது எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தருவார்கள் என்று சொல்லித்தானே கூட்டி வந்தீர்கள்?” “ஆம்” என்று தலையாட்டினார்.

“சரி… உங்களில் யாராவது எம்பிச் சாடி அந்த ஜன்னல் மேல் ஏறி வெளியே குதிக்க முடியுமா?” என்று உரக்கக் கேட்டேன். “ஐயய்யோ… எங்களுக்கு மரம் எல்லாம் ஏறிப் பழக்கம் இல்லீங்கோ” என்று கோரஸாகக் கத்தினார்கள்… நானும் பதிலுக்கு, “அய்யய்யோ… எனக்குத்தான் இங்கே வந்து வாழ்றது எப்படின்னு படிக்காததால பாதி வாழ்க்கை போச்சு… உங்களுக்கு உயரத்தில் சாடி ஏறத் தெரியாததால முழு வாழ்க்கையும் போச்சே…!” என்று கத்தியபடி எம்பிச் சாடி ஜன்னலைப் பிடித்து ஏறி வெளியே குதித்தேன்..”

தங்கப்பன் ஆவல் மிகுதியில் கேட்டார்: “பேஷ்… அப்படியே தப்பி ஓடிட்டீங்களா?”

நாராயணன் அமைதியாகப் பதில் சொன்னார். “அவ்வளவு உயரத்திலேயிருந்து வெளியே சாடினதால ஒரு கால்ல எலும்பு முறிஞ்சு போச்சு… என்றாலும் வேதனையைச் சகித்துக் கொண்டு போய் முன்வாசல் கதவைத் திறந்தேன்… எல்லோரும் சிரித்துக் கொண்டே வெளியே ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்தார்கள்!”

கோடி கோடியாக பணம் புரளும் ஆன்மீக மோசடி வர்த்தகம்

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் tagged , , , , , , , , இல் 11:27 மாலை by பொதுசனம்

கோடி கோடியாக பணம் புரளும் ஆன்மீக மோசடி வர்த்தகம்

யோகா தியானம், ஆயுர்வேதம், வாழ்க்கைக் கலை என்ற வழியில் ‘ஆன்மீகம்’ திரும்பியிருக்கிறது. புராணம், இதிகாசம், சடங்கு வழிபாடு என்ற தளங்களில் உயிர் பெற்றிருந்த ‘இந்து’ மதம் – இப்போது, அறிவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகி, புதிய உருமாற்றத்தை எடுத்து, தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது என்றே கூறலாம். உருவங்களை மாற்றிக் கொண்டு, உலா வரும், இந்த புதிய நம்பிக்கைகளால் – ‘இந்துயிசம்’ போற்றி வரும் பார்ப்பனிய – வர்ணாஸ்ரம சிந்தனையில் மாற்றங்கள் எதுவும் வந்துவிடவில்லை. அந்தப் பாசி படிந்த பழமை – அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கைக் கலையை வழிகாட்டுவதற்கு புற்றீசல் போல் – புதிய, புதிய ‘குருக்கள்’ புறப்பட்டு வந்துள்ளார்கள். அவர்கள் இந்த நம்பிக்கைகளை நல்ல வர்த்தகமாக நடத்தி வருகிறார்கள். அரசியல் அதிகார செல்வாக்குள்ள மனிதர்களின் ஆசியோடு – இந்த வியாபாரம் கடை விரித்துள்ளது.

இது பற்றி விரிவான கட்டுரையை ‘டெகல்கா’ வார ஏடு (ஜுன் 30, 2007) வெளியிட்டுள்ளது. அக்கட்டுரைகளின் சில முக்கியப் பகுதியைத் தொகுத்து வழங்குகிறோம்.

‘கடவுள் அவதாரங்களில்’ முன்னிலையில் நிற்கும் ஒரு குரு – டெல்லியில் வசதிப்படைத்தவர்கள் வாழும் மெரவுலி – குர்காவோன் பகுதியில் – பண்ணை மாளிகை ஒன்றை எழுப்பி, “ஆன்மிகப்” பணி செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் சார்பில் – டெல்லி காவல்துறையிடம், ஒரு புகார் வந்தது. காவல்துறையின் ‘பொருளாதார’க் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு, இந்தப் புகார் வந்தது. அது என்ன புகார்? ‘குரு’விடம் நெருக்கமாக இடம் பிடிக்க விரும்பிய ஒரு சீடர் – “குரு”விடம் நெருக்கமாக ரூ.35 லட்சம் நன்கொடை வழங்கி, குருவிடம் நெருக்கமானார்.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, குரு – புதிய சீடரிடம் 4 கோடி ரூபாயை ‘உடனடி லாபம்’ தரும் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த நிறுவனம் – சீடருக்கு மிகவும் நெருக்கமானது. சீடரோ – நான்கு கோடி பணத்தை ‘நோட்டுகளாக’ வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இது கடந்த மே மாதம் நடந்த சம்பவம் காவல் துறையில் புகார் கொடுத்தாலும் ‘குரு’வோ அவரது சீடர்களோ, இந்த விசாரணையை வலியுறுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணம் இதுதான். இந்த நான்கு கோடி ரூபாய் – தனக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விசாரணையில் ‘குரு’ பதில் சொல்லியாக வேண்டும்.

அந்த ‘ஆன்மீகக் குரு’ சீடர்களுக்காக நடத்தும் அறிவுரைக் கூட்டங்களுக்கு பெரும் தொகையைக் கட்டணமாக வாங்கி விடுகிறார். நட்சத்திர ஓட்டல்களில் தான் இந்தக் கூட்டங்கள் நடக்கின்றன. படித்த மத்திய தர வர்க்கத்தினர், வசதிப் படைத்தவர்கள் – தங்களின் வர்த்தக வாழ்க்கை முன்னேற்றத்துக்காக, ஆலோசனைகளைக் கேட்டு, இத்தகைய ‘ஆன்மீகப்’ பேர்வழிகளை நாடி வருகிறார்கள்.

ரவிசங்கர் என்ற பார்ப்பன ‘ஆன்மிகக் குரு’ ஒரு பேரரசையே நடத்தி வருகிறார். அவரது ஆண்டு வரவு செலவு ரூ.400 கோடியை எட்டுகிறது. வாழும் கலை பயிற்சி மய்யங்கள், உடல்நல மய்யங்களையும் நடத்தி வருகிறார். பெங்களூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அரசுக்கு சொந்தமான மலைப் பகுதியை அரசிடமிருந்து 99 ஆண்டு குத்தகைக்குப் பெற்றுள்ளார்.

அகரம் பாபு என்ற குருவுக்கு – ஆண்டு வரவு செலவு ரூ.350 கோடி. தொழில் – ஆன்மீகப் பேச்சு, டெல்லியில் ‘ரிட்ஜீ’ பகுதியில் இவரது ஆசிரமம் இருக்கிறது. கேரளாவைச் சார்ந்த “அம்மா” (அப்படித்தான் அவரது சீடர்கள் அழைக்கிறார்கள்) மாதா அமிர்தானந்த மாயியின் ஆண்டு வரவு செலவு ரூ.400 கோடி. பெரும் தொழில் நிறுவனம் போல் செயல்படும் இவரது நிறுவனம் – நாடு முழுதும் கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது. உலகம் முழுதுமிருந்தும் பெரும் தொகை நன்கொடைகளாக இவருக்கு குவிகிறது.

பெரும் பணக்காரர்கள், செல்வாக்குள்ள அரசியல் தலைவர்களின் வீடுகளுக்குப் போய் ஆன்மீக ஆலோசனைகளை வழங்கிடும் (ஆன்மீககன்சல்ட்டன்ட்) சுதான்சு மகாராஜ் என்ற ‘குரு’வின் ஆண்டு வரவு செலவு ரூ.300 கோடி. அவ்வப்போது விமானங்களில் வெளிநாடுகளுக்குப் பறந்து – அங்கும் பெரும் பணக்காரர்களுக்கு ‘ஆன்மீக’ விற்பனை செய்து வருகிறார்.

அதேபோல் முராரி பாபு என்று ஒருவர். அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பேரணிகளுக்கும் இவருக்கு அழைப்பு வருகிறது. அங்கு சிறப்பு ஆன்மீக உரை நிகழ்த்து கிறார். உள்நாட்டு – வெளிநாட்டுப் பணக்காரர்களுக்கும் ஆன்மீக வியாபாரம் செய்து வருகிறார். இவரது ஆண்டு வருமானம் ரூ.150 கோடி.

அரித்துவாரில் – பிரமிக்கத்தக்க ஆசிரமத்தைக் கட்டி எழுப்பியுள்ளார் பாபாராம்தேவ். தன்னுடைய ‘புனித கரங்களின் தொடுதலால்’ நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் இவர், மன, உடல்நல மய்யங்களை நடத்தி வருகிறார். அவரது ஆசிரமத்தின் நுழைவாயிலில் மிகப் பெரிய அறிவிப்பு பலகை ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அதில் – அவரது ஆசிரமத்தில் சீடர்களாவதற்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உறுப்பினர் கட்டணம் – ரூ.10,000, கவுரவ உறுப்பினருக்கு ரூ.21,000, சிறப்பு உறுப்பினருக்கு ரூ.51,000, ஆயுட்கால உறுப்பினருக்கு ரூ.1 லட்சம், ஒதுக்கீட்டு (Reserved) உறுப்பினருக்கு ரூ.2.51 லட்சம், நிறுவன (Founder) உறுப் பினருக்கு ரூ.5 லட்சம் என்று கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கத்தாவில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த பிரதீப் கோஷ், பாபாராம்தேவை ‘என்.டி.டி.வி’ தொலைக் காட்சி நிகழ்ச்சியில் நேருக்கு நேர் விவாதித்து, கேள்விகளால் மடக்கினார். பகுத்தறிவாளரின் கேள்விகளைக் கண்டு திக்குமுக்காடினார் பாபாராம்தேவ். “தன்னுடைய வழுக்கைத் தலையில் பாபாவால் முடி முளைக்க வைக்க முடியுமா?” என்று கேள்வியை முன் வைத்தார். கோஷ் – என்னால் முடியாது என்றார் பாபாராம்தேவ். பகுத்தறிவாளர் கோஷ் – ஆன்மீக மோசடிக்குப் யோகாவை பயன்படுத்து வதை விளக்கி, ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பணப்புழக்கமும், பண வீக்கமும் அதிகமானதைத் தொடர்ந்து, இந்த ‘ஆன்மிகக் குருக்கள்’ – அதன் பயனை அனுபவித்து வருகிறார்கள்” என்று கூறுகிறார் கோஷ்.

“பெரும் தொழில் நிறுவனங்கள் – தங்கள் உற்பத்திப் பொருள்களின் தரத்தை மட்டுமே நம்பி சந்தையில் இறங்கினால், இன்றைய போட்டி சந்தையில் வெற்றி பெற முடியுமா? நிச்சயம் முடியாது. அதற்கான விளம்பரமும், திட்டமிடுதலும் அவசியம் தேவையாகிறது. இந்த வியாபார யுக்தியில் இந்த ‘ஆன்மிகக் குரு’க்களும் கைதேர்ந்தவர்கள் தான்” என்கிறார் கோஷ்.

பாபாராம்தேவ் – உத்தரகாண்ட் மற்றும் ம.பி. மாநிலங்களில் இரண்டு மிகப் பெரும் பல்கலைக் கழகங்களை உருவாக்கி வருகிறார். இரண்டு மாநில அரசுகளும், மிகக் குறைந்த விலையில், இவருக்கு நிலங்களை ஒதுக்கித் தந்துள்ளன. அண்மையில் இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாபாராம்தேவ், “எங்களால் இலவசமாக எதையும் தர முடியாது. அது இயலாதது. நாங்கள் செய்வதற்கு எல்லாம் உரிய கணக்குகள் உண்டு. முறையான தணிக்கை உண்டு” என்று கூறியுள்ளார்.

பாபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 பேர் வருகிறார்கள். அவரது மருத்துவ மய்யம் டெல்லியில் இருக்கிறது. மருந்து பொருள் களையும் இவரது நிறுவனம் தயாரிக்கிறது. அதன் விலையோ மிக மிக அதிகம். இத்தனைக்கும் இவரது நிறுவனத்துக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய ஆண்டுகளிலேயே பெரும் பணக்கார நிறுவனமாக பாபாவின் ‘திவ்ய யோக மந்திர்’ வளர்ந்துள்ளது என்று அண்மையில் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. நகரின் முக்கியப் பகுதிகளில் 19.55 ஏக்கர் நிலத்தை, இத்தகைய ‘ஆன்மீக குருக்கள்’ சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். இவற்றின் மதிப்பு ரூ.1900 கோடி.

‘ஆசிதரம்ஜி அறக்கட்டளை’ ரூ.2.15 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்றும், ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரூ.1 கோடி வருமான வரியை கட்டவில்லை என்றும், டெல்லி வருமான வரித்துறை அதிகாரி அசோக்சிங் கூறியுள்ளார். டெல்லியின் தெற்குப் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் – இந்த “ஆன்மீகக் குருக்கள்” ஆன்மீக உரை நிகழ்த்துகிறார்கள். வெள்ளை உடையுடன் உரை கேட்க வரும் சீடர்கள் ஒவ்வொருவரிடமும் வாங்கப்படும் நுழைவுக் கட்டணம் மட்டும் ரூ.5000. சைவ சாப்பாட்டுடன் ஒரு மணி நேரம் மட்டுமே உரை.

பெங்களூருக்கு அருகே குன்றுப் பகுதியில் ரவிசங்கர் நிறுவியுள்ள ஆசிரமத்தில், ஹெலிகாப்டர் இறங்குதளம், செயற்கை ஏரி, புத்தக விற்பனை மய்யங்கள், கணினி மய்யங்கள், குடியிருப்புகள், செயற்கைக் கோள் வானொலி மய்யம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘வேத கணிதம்’ கற்பிக்க பல்கiக்கழகம் ஒன்றை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். ஆண்டுதோறும் இங்கே நடக்கும் ஆன்மீகத் திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ5000.

இந்த ஆண்டு, இந்த நுழைவுக் கட்டணத்தை செலுத்தி, விழாவில் பங்கேற்றோர் 5,50,000 பேர்; அவ்வளவு பெரிய வசூல்! “எங்களது ஆன்மீகம் பெரும் தொழில் நிறுவனங்களைப் போல்தான் – அமைப்பு ரீதியாக பரப்பப்படுகிறது” என்று ‘டெகல்கா’வுக்கு அளித்துள்ள பேட்டியில் ரவிசங்கர் ஒப்புக் கொள்கிறார். (கடந்த ஆண்டு – சிறீலங்காவுக்கும், யாழ்ப் பாணத்துக்கும் சென்று பேசிய ரவிசங்கர், ஈழத் தமிழர் பிரச்சினையைத் தன்னால் தீர்த்து வைக்க முடியும் என்று கூறியதோடு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தார். அரசியல் பிரச்சினையில் ஆன்மீகத் தீர்வுக்கு இடமில்லை என்று கூறி, பிரபாகரன், சந்திக்க மறுத்து விட்டார் – ஆர்)

மராட்டிய மாநிலம் புனேயில் கோரே கான் பகுதியில் ஓசோவின் (ரஜினீஷ்) சர்வதேச தியான மய்யம் – வெகு ஆடம்பரமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. வெள்ளை சலவை கற்களால், அழகிய தோட்டங்களோடு காட்சியளிக்கும் அந்த மய்யம் உல்லாச புரியாகவும் திகழுகிறது. ஓசோவின் மரணத்துக்குப் பிறகு அவரது ஆன்மீக நிறுவனத்தின் வர்த்தகம் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறார் மய்யத்தின் நிர்வாகி மாசாதனா. ஓசோ மய்யத்தின் நட்சத்திர ஓட்டல்களில் – ஓசோவின் சீடர்கள் வந்து தங்குகிறார்கள். அங்கே நிர்வாண மய்யங்களும் உண்டு.

மீனவர் சமூகத்தில் பிறந்தவர் என்றாலும் கேரளாவின் அமிர்தானந்த மாயி – மீனவர் பிரதிநிதியாகவோ அல்லது மீனவர் சமூகப் பின்னணி கொண்டவராகவோ இல்லை. 33 பள்ளிகள், 12 கோயில்கள், உயர்ந்த வசதிகள் கொண்ட மருத்துவமனை, அமிர்தா தொலைக் காட்சி, நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று அவரது உடைமைகளின் பட்டியல் நீள்கிறது. இவரது ஆண்டு வரவுசெலவு 175 கோடி. வெளிநாட்டு நிதி பெறுவதில் இந்தியாவிலே இரண்டாவது இடத்தில் இருப்பவர் இவர்தான் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் மட்டும், இவருக்கு வந்த வெளிநாட்டுப் பணம் ரூ.51.55 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் கொச்சியில் – இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, கேரள நாளிதழ்களுக்கு, பெரும் தொகையை அன்பளிப்பாக வழங்கினார். மலையாள நாளேடுகள் “அம்மா”வுக்கு பக்கம் பக்கமாக சிறப்பிதழ்களை வெளியிட்டன.

சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.100 கோடி செலவிட்டார். அமெரிக்காவில் கத்ரினா புயல் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கினார். இவரது ஆசிரமத்துக்கு அய்.நா. சிறப்பு கவுரம் வழங்கி, தொண்டு நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத் தலைவர்களோடு நெருக்கமாக இருப்பவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

கேரளா பகுத்தறிவாளர் யு. கலாநாதன் கூறுகையில் – “ரூ.1200 கோடி மதிப்புள்ள பேரரசை கட்டி ஆண்டு வருகிறவருக்கு, இத்தகைய உதவிகள் எல்லாம் மிகச் சாதாரணம். அவர் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் படிப்பதற்கு வாங்கும் நன்கொடை ரூ.40 லட்சம். முக்கிய பிரமுகர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் கட்டணச் சலுகை தருகிறார்கள்” என்கிறார் கலாநாதன்.

புதுடில்லியில் ‘அரே கிருஷ்ணா, அரே ராமா’ அமைப்புக்கு தனிக் கோயில் இருக்கிறது. பெரிய இடத்தில் – மாளிகை இருக்கிறது. ஆயுள் உறுப்பினருக்கான கட்டணம் ரூ.10,000/-

“நாங்கள் 400 கோயில்களையும் 100 சைவ ஓட்டல்களையும் நடத்துகிறோம்” என்கிறார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விராஜேந்திர நந்தன்தாஸ். தங்களுக்கு பெருமளவில் நன்கொடை தரும் பட்டியலில், நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹேமமாலினி, ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்தின் மகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்தப் பிறவியில் மோட்சம் போவதற்கு – சடங்குகளை வழிபாடுகளை, வலியுறுத்தி வந்த இந்து மதம் – இப்போது, தன்னைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகக் கூறி வருகிறது. இதற்காக நட்சத்திர ஒட்டல் கலாச்சாரத்துடன் – ‘ஆன்மீகக் குருக்கள்’ பக்தி வர்த்தகச் சந்தைக்கு வந்துள்ளனர். விமானங்களில் பறக்கின்றனர். நட்சத்திர ஓட்டல்களில் ‘ஆன்மீகம்’ பேசப்படுகிறது.

உருமாற்றங்கள் ஏற்பட்டாலும் பார்ப்பனியம் – சாதியம் – மூடநம்பிக்கைகள் என்ற பிற்போக்குக் கொள்கைகளை மட்டும் இந்து மதமோ, நவீன ஆன்மீகமோ கைவிடத் தயாராக இல்லை. பார்ப்பனியம் புதிய ‘அவதாரத்துடன்’ – பவனி வருகிறது.

என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்… சூப்பர் ‘பல்டி’ ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே?

.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் tagged , , , , இல் 10:46 மாலை by பொதுசனம்

என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்… சூப்பர் ‘பல்டி’ ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே?
எஸ். அர்ஷியா
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கலைத் தாகத்தைத் தீர்த்து வைக்கும் முகமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘குசேலன்’ தமிழ்த் திரைப்படம் தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பிரச்சனைகள் ஏதுமின்றி வெளியாகி விட்டது.

கர்நாடகத்தில்,

‘அன்பும் பாசமும் மிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்! ஒகனேக்கல் பிரச்சனையின் போது, தமிழகத்தில் திரைப்பட நடிகர் – நடிகையர் உண்ணாவிரதம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் நான் பேசியது, கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளும் கூட. ஒரு கலைஞன் நாடு, மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லோருக்கும் பொதுவானவன். நான் நடித்துள்ள திரைப்படங்களை கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல்,
கன்னடியர்களும் பிற மொழியினரும் பார்க்கிறார்கள்.

எனவே, யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ‘குசேலன்’ படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,
ரஜினிகாந்த்.’

என்று, கிட்டத்தட்ட அவர் மன்னிப்புக் கேட்டு / வருத்தப்பட்டு எழுதிய ‘சாதுர்ய பல்டி’க் கடிதத்தின் அடிப்படையில் தான், அங்கே திரையைத் தொட முடிந்திருக்கிறது. திரைப்படத்தில் கதாநாயகியைக் காப்பாற்ற அவர் அடிக்கும் அந்தர் பல்டிகளையும் தாண்டி, இப்போது சாத்வீகமாக அடித்திருக்கும் இந்தக் கடித பல்டியின் அவசியமென்ன எனும் கேள்விக்கான பதில், எல்லோருக்குமே தெரிந்தது தான்!

இதன் மூலம், சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தின் உண்மை முகம் வெளிப்பட்டு இருக்கிறது! ஒரு சூப்பர் ஸ்டார், படங்களுக்கு வெளியேயும் நடித்து வந்திருக்கிறார் என்பதை அவராகவே தெளிவுபடுத்தியிருக்கிறார்! மேலே சொன்ன மாநிலங்களைத் தவிர, அமொ¢க்காவிலும், ஜப்பானிலுமாக ஆக மொத்தம் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் நட்பைப் போற்றும் அப்படம், காட்சிகளாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

படம் வெளியாகும் முன்பே, அப்படம் வெற்றியடைய மதுரை ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட பக்தி மயம். அடுத்த படமான ரோபோவுக்கு பறவைக்காவடி எடுப்போம் என்று இப்போதே கங்கணம் கட்டிக் கொண்ட நேர்த்திக் கடன். திரையரங்குகளின் கட்டிட உயரத்துக்கும் மேலாக, ஒட்டுகள் போட்டு உயர்த்தப்பட்ட ரஜினிகாந்தின் முழு உருவப்படங்கள் வைத்தது போன்ற பில்ட் – அப்புகள். நாளிதழ்களிலும்., ஒரு சில உள்ளூர் சேனல்களிலும் தினம் தினம் இதே செய்தி தான். படத்திற்கான முன்னோட்ட விளம்பரங்கள் தான், இவை!

இங்கே மட்டுமல்ல, அமொ¢க்காவிலும் நடந்தது இந்தக் கூத்து. ஜப்பானில் நடந்தது பற்றியத் தகவல்களைத் திரட்ட முடியவில்லை!

வறுமைக்கும் தா¢த்திரத்திற்கும் அடையாளமாக்கப்பட்டு, வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் நட்பாக ஆச்சரியப்படுத்தப்பட்டு புராணக் கதையில் உலவி வரும் பொருளாதார வக்கற்ற சுதாமா என்ற ‘குசேலன்’ பெயா¢ல், பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கிறது, இப்படம். சுதாமாவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் தன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய ஏழை நிறுவனமான கவிதாலயா, தனது ஏழை நண்பர்களில் ஒருவரான விஜயகுமார் ஆகிய குசேலர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிருஷ்ணா¢ன் வடிவமாக அவதானித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்!

“கதைப்படி, அவர் பத்து நிமிடங்கள் தான் படத்தில் வருவதாக முதலில் இருந்தது. இது, சூப்பர் ஸ்டார் படமல்லவா? ரஜினிகாந்த்தின் குறைநேரப் பிரவேசத்தை எப்படி ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? அவரவர் வீட்டில் அடுத்த நேரத்திற்கு அடுப்பு எரியாதே! தமிழ்நாடே பட்டினிக் கிடந்து… சோமாலியா போல் தமிழ்நாட்டு மக்கள் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டால்… நயன்தாரா போன்ற கொழு கொழு நடிகைகளுடன் சூப்பர் ஸ்டார் ஆடிப் பாடி நம்மை மகிழ்விக்கும் காட்சிகள் பயனில்லாமல் போய் விடுமே? அப்படியாகி விடலாமா? அதன் பின்பு நாமெல்லாம் தமிழர்களா? என்ற கேள்வி எழுந்து, ஐ.நா. சபையில் விவாதிக்கத் தொடங்கி விடுவார்களே எனும் ஐயப்பாட்டில் தான், பத்து நிமிடங்களை அறுபது நிமிட நேரமாக அதிகா¢த்து, தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சில் மட்டுமன்றி உலகத் தமிழர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளேன். குறிப்பாக, கன்னட தமிழ் ரசிகர்களின் நெஞ்சையும் குறிவைத்தே பால் வார்த்துள்ளேன்” என்று அப்படத்தின் இயக்குநர் அம்மா – தாலி சென்டிமென்ட் புகழ் பி. வாசு சொல்லி, நம்மையெல்லாம் ஆசுவாசப் படுத்தியிருக்கிறார்.

இல்லையென்றால்… இந்நேரம் தசாவதாரம் படத்தின் கடைசிக் காட்சியில் ஏற்படும் பிரளயம் போல் ஏதாவது ஏற்பட்டு, தமிழர்களெல்லாம் அழிந்து போய்விட்டிருப்பார்கள். நல்லவேளை… அவரது நாசூக்கான விளம்பரப் பேட்டி, நம்மையெல்லாம் காத்துவிட்டிருக்கிறது.

அப்பப்பா… குசேலனுக்குத் தான் எத்தனையெத்தனை விளம்பரங்கள்? கோயமுத்தூர் ஏர்டெல்லிலிருந்து அம்பானி மைந்தர்களின் பிக் மியூஸிக் வரை. அத்தனையும் விளம்பரங்கள் தான்! அது சரி…விளம்பரங்கள் தானே ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. அது, சூப்பர் ஸ்டார் படமாகவே இருந்தாலும்! விளம்பரங்களால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிட முடியுமா?

அதற்கு பதில் இங்கே இருக்கிறது!

“தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா… ‘சப்ஜெக்ட்’ தான் ‘அட்வான்ஸ்’ ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்?”

நாடக மேடையையும் நடிப்புக் கலையையும் சமூக சீர்திருத்தங்களுக்கும், நாத்திகப் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி வெற்றி கண்டவர், பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா. 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த ரகளைப் பேட்டியில், “தமிழ்ச் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?” என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, அவர் சொன்ன பதிலின் ஒருபகுதிதான், இது!

ஆம்… 1964-ம் ஆண்டின் நிலைமையிலிருந்து (அதற்கு முன் என்ன வாழ்ந்தது என்று கேள்வியும் எழுப்பலாம்) 2008-ம் ஆண்டு வரையிலும் கூட தமிழ்ச் சினிமா மாறவில்லையென்பது, காலத்தின் கொடுமையும் ரசிகர்களின் மாறாத மனோபாவமுமே ஆகும். அதுவே திரையுலகின் வெற்றியாகவும் இருந்து வருகிறது!

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இருபெரும் திலக துருவங்களுக்குப் பின், தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ் கெய்க்வாட் நடித்து வருகிறார். பிற நடிகர்களுக்கு வழங்கப்பட்டது போலவே அவருக்கும் ஒரு பட்டம் அளிக்கப்பட்டது. அதுதான் சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். அந்த சூப்பர் ஸ்டார் பட்டம், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினிகாந்த் என்ற பெயருக்கு மாற்றாக திரையுலகின் உள்ளேயும் வெளியேயும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு நான்கு படங்கள் வரை, தனது ஸ்டைலைப் போலவே வேகவேகமாகக் கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார், பாட்ஷா படத்தின் வெற்றிக்குப் பின், நிலை நிறுத்திக் கொள்ளும் வாழ்வியலின் தத்துவத்திற்கேற்ப நிதானத்திற்கு வந்தவராக இருக்கிறார். அவரது படம் வெளியாகும் தினம், மற்றெல்லா நாட்களைப் போல இல்லாமல், அது ஓர் உன்னத தினமாக அவரது ரசிகர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களுக்கு அந்த தினம் தான் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், ஏன் கதிமோட்சமும் கூட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நடித்தத் திரைப்படம் வெளிவராத தீபாவளியை, ரசிகர்கள் துக்க தீபாவளியாக அனுஷ்டித்தக் ‘காலக் கெரகமும்’ நடக்கவே செய்தது. ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை குதிரை ரேஸைப் போலவும், மஞ்சுவிரட்டு போலவும் ஆர்வமுடன் ஓடவிட்டு கலெக்ஷனைக் ‘கல்லா’க்கட்டி வந்த போட்டியிலிருந்து, அவரது படங்கள் தற்போது சுயமாகவே விலகிக் கொண்டுள்ளன. கால இடைவெளி அல்லது நீண்ட நாள் தயாரிப்புக்கு இலக்காகி, தனித்த ஓட்டங்களுக்கு அவை தயார்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பிற ரசிகர்களின் பார்வையிலும் அந்தத் திரைப்படங்கள் கவனம் பெற்று வசூலில் பின்னியெடுக்கின்றன. இது, ஒருவித யுக்திதான்!

அந்த நிலையிலும், சூப்பர் ஸ்டாரின் பாபாவும் சிவாஜியும் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை என்பதன் காரணம், நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பதிலிலேயே இருக்கிறது! ஆனாலும், பொதுமையிலிருந்து விலகி, அவரது படங்கள் வெளியாகும் நாட்கள், தனித்த பூகம்ப நாட்களாக மாறிவருவதை பூடகமாகவே கருத வேண்டியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் திரைப் பா¢மாணத்தின் மூலமான பொதுமையை, கி.பி., கி.மு., போல, பாட்ஷா படத்துக்கு முன்பு, பாட்ஷா படத்துக்கு பின்பு என்றே கணக்கிட முடிகிறது. அதற்கு முன்பான அவரது படங்களில், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் போன்ற படங்களில் தான், அவர் அப்படங்களின் இயக்குநர்களின் உதவியால் நடிப்பு வேலையை திறம்படச் செய்திருந்தார். அதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் வாய்ப்பு உள்ளது. பிற படங்களில் அவர், ‘யாரடி நீ மோகினி?’ படப்பாடலுக்கு உத்தமபுத்திரனாக விரைத்துக் கொண்டு நடித்த சிவாஜி கணேசனின் பாணியைத்தான், சற்றே மாற்றி வேகநடையில் செய்து வந்திருக்கிறார். இதனாலேயும் கூட அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் உண்டு. எப்படியாயினும் தமிழ்த் திரையுலகின் அழிக்க முடியாத சாகச சாதனைப் பட்டியலில், அவரது பெயர் சூப்பர் ஸ்டாராகவே பிளாட்டின எழுத்துக்களால் பொதியப்பட்டுவிட்டது.

தமிழ்த் திரையுலகின் மன்னாதி மன்னனாக – எம்.ஜி.ஆர். இல்லை – சூப்பர் ஸ்டார் மாறிவிட்ட பின்பு, அவரது வாய்ஸ்க்கு மதிப்பு இருப்பதாக நம்பப்பட்டு வருவது, தமிழ்நாட்டின் கேடுகளில் மிக முக்கியமானக் கேடாகும். 1996 மற்றும் அதற்குப் பின்பானத் தேர்தல்களில் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் காரணியாக அவர் வரையறுக்கப்பட்டு வருவது, வேறூன்றி கிளைபரப்பிய அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் கட்சியின் மீதும் தங்களின் மீதுமன்றி, மக்களின் மீதும் நம்பிக்கையின்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. புள்ளி விவரக் கணக்கில் சாதுர்யம் மிகுந்த தலைவர் கூட வாய்ஸ்க்காக ஏங்குவது கேலிக்கூத்துதான்!

அப்போதும் கூட, கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதங்கள் தான் முத்திரைகளாகப் பதியப்பட்டன என்பது தெரிந்திருந்தும், வாய்ஸ் தேடி ஓடும் கொடுமை அரசியல் கட்சிகளிடம் இன்னும் இருக்கவே செய்கிறது.

காவிரிப் பிரச்சனைக்கு, ஒட்டு மொத்தமாக நெய்வேலியில் திரண்ட நடிகர்களுக்கு எதிர்ப்பாக, மறுநாள் சென்னையில் மேடைபோட்டு தனித்து உட்கார்ந்து, பட்டினி வேஷம் கட்டி, தன்னைத் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகடனப்படுத்திக் கொண்டது; நதி நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, தனது சொந்தப் பணத்தில் ஒருகோடி தருவதாக அறிவித்தது; அதை இதுவரைக்கும் தராமல், ‘அஸ்க்கு… புஸ்க்கு’ காட்டுவது; புலி வருது புலியாக பன்னெடுங் காலமாக அரசியலில் குதித்து, மக்களின் நல்வாழ்வைக் கெடுப்பேன் என்று தவணை முறையில் பயமுறுத்துவது; அதைச் சொல்லிச் சொல்லியே தனது ரசிகர்களை உசுப்பேற்றிவைத்திருப்பது தான், அவரது சூப்பர் ஸ்டார்த்தனம்!

அவரது வாய்ஸ்க்கு, மக்கள் செவி சாய்க்கிறார்களா எனும் கேள்வி தான் அவரை இத்தனைக் காலமும் யோசிக்க வைத்து, அவ்வப்போது மலையேறச் செய்து வருகிறது. அந்த மலையேறலை நிதர்சனப்படுத்த அவர் எடுத்த பாபா, கல்லா கட்டும் அருள் தராமல் மலையிறங்கிப் போய்விட்ட சம்பவம், தான் கடந்து வந்த பெரும்பான்மை வழியைத் தேடி சூப்பர் ஸ்டாரை மறுபடியும் ஓட வைத்தது.

என்ற போதும், அவர் தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார். அதன் பின்பு வெளியான படையப்பாக்களும் சந்திரமுகிக்களும் சிவாஜிக்களும் அதன் வெளிப்பாடுதான்! அகத்தியனின் 20 + வயதுடைய மகள் விஜயலட்சுமியுடன் ஜோடி கட்டப் போகும் 60 வயதைத் தொட்டு விட்ட, நாட்டில் அதிகமாகச் சம்பளம் பெறும் மூத்த நடிகர் அவர். குசேலனுக்கு முன்பாக நடித்த சிவாஜி படத்துக்கு, அவர் வாங்கிய சம்பளம் கொஞ்சம் தான். சுமார் ரூபாய் 15 கோடியாம்!

இதுதான் தமிழனின்… தமிழ்நாட்டின்… வக்கு!

கஞ்சி குடிக்காமல், உழைத்தக் களைப்பைப் போக்க டாஸ்மாக் போகாமல், தமிழக மக்கள் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்ததில் தானே அவருக்கு இவ்வளவு சம்பளம் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடிகிறது? அதை அவர் நன்றியுடன் வைரமுத்துவின் வா¢களால் எப்படிப் பாடுகிறார் தெரியுமா? “வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா… ஆயிரம் தடைக்கல்லும் படிக்கல்லப்பா…!”

அப்படி அவர் படிக்கல்லில் ஏறச் சிந்தும் ஒவ்வொரு வேர்வைத் துளியும் தமிழக மக்களின் இளிச்சவாய்த்தனத்தாலே தங்கக்காசு ஆனதை, அவர் மறைக்கவே இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன்(?) பட்டுள்ளதாக கூறிக் கொள்ளும் அவர், ஒகனேக்கல் பிரச்சனையில், பேசியப் பேச்சை நினைவுபடுத்திக் கொள்ள, திரைப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சி போல, நாம் சற்று சுற்றிச் சுற்றிச் சுற்றி… பின்னுக்குப் போக வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பாக, கர்நாடகத்தில் இயங்கிவரும் அத்தனை சாதிய அமைப்புகளும் அங்குள்ள மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஒட்டு மொத்தமாய்க் குரல் கொடுத்தன. அதைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைப்படத் துறையினர் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் தமிழ் மண்ணில் முத்தெடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘கர்நாடக – தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால் சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிறத் தண்ணியிலே பிரச்சனைக் கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?’ என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பேச்சைக் கேட்டு, தமிழ் மக்கள் புளகாங்கிதப்பட்டு, “சூப்பர் ஸ்டாரு… சூப்பர் ஸ்டாரு தான்…” என்று பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் பாடியதென்னவோ உண்மை தான்! ‘கர்நாடகத்து ஆளா இருந்தாலும், பொழைக்க வந்த மண்ணுக்கு ஏத்துக்கிட்டுப் பேசறாரே!’ என்று அகமகிழ்ந்து போனதும் உண்மை தான்! அதே வேளையில், ‘அங்கே உக்காந்துக்கிட்டு டமாரம் வாசிக்கிறியா!… வாடி, ஒம்படம் இங்கே வரணும்ல்ல?’ என்று அப்போதே கர்நாடக அமைப்புகள் அறைகூவல் விட்டன. கர்நாடக அமைப்புகளுக்கு, அறைகூவலை செயல்படுத்துவதற்கான நேரம், இது!

மோசமான நடவடிக்கைளில் ஈடுபடும் அவை, குசேலனை திரையிட விடாமல் ரகளை செய்யவும் தயாராகவே இருந்தன. இந்நிலையில் தான், சூப்பர் ஸ்டார் கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபைக்கு மேலே சொன்ன கடிதத்தை எழுதியிருக்கிறார்.

கடிதம் எழுதுவதற்கு அப்படியென்ன அவசியம் வந்துவிட்டது? தமிழக மக்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டால், அதன் பின்னால் கர்நாடகத்தில் தன் படங்களை ஓட்ட முடியாது என்று தெரியாத அப்பாவி விரல் சூப்பியா நம் சூப்பர் ஸ்டார்?. எல்லாம் அவருக்குத் தெரியும். இருந்தும், ஏன் பேசினார்? கர்நாடக மக்கள் மறந்து விடுவார்கள் என்றா? இல்லை, படம் முடியும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றா?

இல்லவே இல்லை… எல்லாமே தொழில் தந்திரம்!

அந்தத் தந்திரம் தான், கடிதம் கொடுத்துப் படத்தை ஓட்டுங்கள் என்று சொல்ல வைக்கிறது. ‘பாடம் கற்றுக்கொண்டேன்’ என்று தன் பொய் முகத்துக்கு ஒப்பனை போட்டுக் கொள்கிறது. பாடம் கற்றுக்கொண்டேன் என்றால் யாரிடமிருந்து? சோறு போடும் தமிழ் ரசிகனிடமும் தமிழ் நாட்டிலிருந்துமா? இல்லை, தொழில் முடங்கிப்போய்விடும் பயத்தை உருவாக்கிய கன்னட வெறியர்களிடமிருந்தா?

சொல்லுங்கள்… சூப்பர் ‘பல்டி’ ஸ்டார்… மன்னிக்கவும்… சூப்பர் ஸ்டார் அவர்களே!

இங்கே தமிழர்களுக்கு ஆதரவாக உணர்ச்சிப் பொங்க பேசிவிட்டு, இப்போது அடித்திருக்கும் பல்டி, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை பேரும் ‘கேனைக் கிறுக்கன்’ என்று அவர் நினைத்திருப்பதால் தானே! வாழும் இடத்தில் காலூன்றிக் கொள்ள அவர் அப்போது பேசியதும், தான் பிறந்த மண்ணில் தனது படம் ஓட அவர் மன்னிப்புக் கேட்பதும் நிச்சயம் பெருந்தன்மையினால் அல்ல என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அவரது நிஜ முகம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் போர்த்தியிருந்த பசுந்தோல் பொருந்தாமல், கோர முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

கர்நாடகத்தில் அவர் படம் திரையிடப்படவில்லையென்றால்… இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் காங்கிரஸ¥ம் ஒண்ணும் மண்ணுமாக கைக் கோர்த்துக் கொள்வார்களோ? இல்லை… இலங்கையில் சிங்கள இனவாத அரசு வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமரசமாகிப் போய் விடுமோ…? இல்லை… புஷ்தான், பின்லேடனுடன் கை கோர்த்துக் கொண்டு மியாமி பீச்சில் காற்று வாங்கப் போய்விடுவாரோ?

தமிழ் மக்கள் மீது பற்று கொண்ட சூப்பர் ஸ்டார், ‘கர்நாடகால என் படத்தைத் திரையிட விடாட்டிப் போங்க!’ என்று சொல்லியிருந்தால்…’சபாஷ், சூப்பர் ஸ்டார்!’ என்று விசில் அடித்திருக்கலாம். ஆனால் மண் பாசத்தில், அவர் பல்டியல்லவா அடித்திருக்கிறார்? பிரச்சனைக்கு முன்பே விநியோகஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டிருந்தால், நஷ்ட ஈடு கொடுத்து சரிக் கட்டியிருக்கலாமே! திரையிட்ட தோல்விப் படங்களுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர் தானே…இந்த சூப்பர் ஸ்டார்!

அவரது பல்டியை அதே திரையுலகில் இருக்கும் சத்யராஜ், ‘எனது படத்துக்கு இந்த நெருக்கடி வந்திருந்தால்… விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு தந்திருப்பேன். ஆனால் ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாக இருப்பேன்!’ என்றதற்கு, அவர் பச்சைத் தமிழன் என்பதும் ஒரு காரணமாகும்! ஆனால் இவர் வியர்வை சிந்தி, அதைத் தங்கக் காசுகளாக மாற்றிக் கொள்ள வந்தவர் தானே?

இதைத் தவிர, இந்த சந்தடியில் வேறு பல கூத்துகளும் தமிழ்கூறும் நல்லுலகில் நிகழ்ந்து தொலைக்கின்றன. தமிழுக்கும் சுயமா¢யாதைக்கும் நேற்று சாயங்காலம் வரைக்கும் முட்டுக் கொடுத்து வந்த இயக்குநர் சீமான் போன்றவர்கள், ‘இது தொழில். அதை மனசுல வைச்சு நிதானமா யோசிச்சுப் பாக்கணும்!’ என்று புதுசாக ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவர்களையே கேலி செய்து கொள்வது போலத் தான் இருக்கிறது. பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்? சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து ஒரு படம் செய்யக் காத்துக் கிடப்பவர்கள் தானே!

கவலைப்படாதீர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே… சொரணை கெட்ட தமிழர்கள் தான் நாங்கள். இந்த விளம்பரச் சந்தடியில் குசேலன் வெற்றிப் படமாகியிருக்கும். உங்களது அடுத்தப் படம், ரோபோவாக இருந்தாலும் சரி கீபோவாக இருந்தாலும் சரி… நீங்கள் தங்கக்காசுகளை அள்ளிக் கொள்ள, அதையும் வெற்றிப் படமாக்கித்தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

“ஒண்ணு சொல்றேன் கேளுங்க… நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப் பட உலகம் உருப்படும். அப்போ தான் முதலாளிங்க புது ஆசாமிகளாப் போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?” பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா, 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த அதே ரகளைப் பேட்டியில் அதே கேள்விக்குச் சொன்ன பதிலின் பிற்பகுதி தான், இது!

இன்றைக்கு மட்டுமல்ல… அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும் பதிலாகவே அது, இருக்கிறது!

ரஜினிகாந்த் என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை. அவரும் அதைச் சொல்லவில்லை. ஆனால் தமிழர்களாகிற நாம், தொடர்ந்து பாடம் கற்றுக் கொண்டே வருகிறோம். ஏனென்றால், அந்த அளவுக்கு மக்குகள் நாம்!

திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் – ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் tagged , , , , , , இல் 10:27 மாலை by பொதுசனம்

திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்
ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

தமிழ் ஆங்கில ஊடகங்களில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருபவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். ஆங்கிலப் பத்திரிகைகளில் திராவிடக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஆரம்பத்தில் தமிழில் திசைகள் பத்திரிகையிலும், ஆங்கிலத்தில் Sunday observer பத்திரிகையிலும் பின்னர் Illustrated weekly, Frontline, Business India, Outlook எனப் பல பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக Panos South Asia நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அதிலிருந்து…

A.S. Pannerselvan உங்கள் பின்னணி குறித்து?

சென்னை அயனாவரம் தான் சொந்த ஊர். என் பெயரில் உள்ள A அயனாவரத்தைத்தான் குறிக்கும். 90 வருடங்களுக்கு முன்னர் தாத்தாவிற்கு பெண்பார்க்கும்போது மேடவாக்கம் அருகே பொன்மார் என்ற கிராமத்தில் பார்த்திருக்கிறார்கள். ‘ரொம்பவும் தெற்கே போய் பெண் எடுத்ததாக’ அதற்கே என் குடும்பத்திற்குள் சண்டை நடந்துள்ளது. இப்படிப்பட்ட பின்னணிதான் என்னுடையது. பள்ளி, கல்லூரி எல்லாமே சென்னையில் தான். கல்லூரியில் இயற்பியல் படித்தேன்.

மாலனின் ‘திசைகள்’ பத்திரிகையில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். அதே நேரத்தில் ‘Sunday observer’ இதழில் ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கினேன். எழுத ஆரம்பிக்கும்போது அரசியல் குறித்து எழுத வேண்டும் என்ற நோக்கம் இருந்ததில்லை. இந்திய அறிவியல் அமைப்பில் உள்ள மனிதத்தன்மையற்ற செயல்களில் தான் முதலில் அதிக கவனம் செலுத்தினேன். 1984ல் போபால் விஷவாய்க் கசிவு நடந்தபோது அது குறித்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினேன்.

அப்போது தமிழகத்தில் இலங்கைப் பிரச்சனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைத் தமிழர்கள் அதிகளாக தமிழகத்திற்கு அதிக அளவில் வரத்தொடங்கினர். நான் தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் இலங்கைப் பிரச்சனை தொடர்பான தமிழ் அறிக்கைகளை மொழிபெயர்த்துத் தருமாறு ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்து கேட்பார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான் முழுநேர பத்திரிகையாளனாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரே பத்திரிகையில் முழுநேர வேலையில் சேராமல், அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் வராமல் இருக்க அறிவியலைத் தவிரவும் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுத வேண்டி வந்தது. ஒவியர்கள், படைப்பாளிகள் குறித்து தொடர் எழுதினேன். இதன்மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் தொடர்புகள் கிடைத்து எழுத ஆரம்பித்தேன். பிரண்ட்லைன் பத்திரிகையிலும் என் கட்டுரைகள் வெளிவந்தன.

1987ல் இந்திய இலங்கை அரசு ஒப்பந்தம் ஏற்பட்டு, 1988ல் அதன் முதல் ஆண்டு கொண்டாட்டத்தின் போது நான் 43 நாட்கள் இலங்கையில் இருந்தேன். ‘யுத்த பூமியில் 43 நாட்கள்’ என்ற தலைப்பில் அது தொடராக விகடன் குழுமத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட்டில் வெளிவந்தது. இலங்கை நிலவரம் குறித்து ‘Illustrated weekly’ பத்திரிகையிலும் விரிவாக எழுதினேன்.

ஃபிரீலான்சராக பணியாற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. பல நாட்கள் கஷ்டப்பட்டு, பல ஊர்கள் பிரயாணம் செய்து, ஒரு கட்டுரை எழுதினால் அதற்கு நான்கைந்து மாதங்கள் கழித்துதான் பணம் கிடைக்கும். அதற்கிடையே அடுத்த பயணத்திற்கு காசு வேண்டும். இதைத் தவிர்க்க, 1988 நவம்பரில் Business India பத்திரிகையில் correspondent ஆக முழுநேர வேலையில் சேர்ந்தேன். 1995 வரை அங்கு வேலை செய்தேன். அதில் வேலைசெய்தாலும், தமிழ்ப்பத்திரிகைகளிலும், Business Indiaவின் வியாபாரத்தை பாதிக்காத வகையில் இதர ஆங்கிலப் பத்திரிகைகளிலும் எழுதுவதற்கு எனக்கு சுதந்திரம் இருந்தது.

பாவைச்சந்திரன் குங்குமத்தில் ஆசிரியராக இருந்தபோது தமிழிலக்கியம் தொடர்பாக நிறைய விஷயங்களை குங்குமத்தில் என்னால் எழுத முடிந்தது. 1991ல் பாவை குங்குமத்தை விட்டு வெளியேறிய பிறகு தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது குறைய ஆரம்பித்தது.

1995ல் வினோத் மேத்தா அவுட்லுக் ஆரம்பித்தார். அவரின் அழைப்பை ஏற்று நான் அதில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் பத்திரிகைக்குப் பெயர் கூட சூட்டப்படவில்லை. 2001 வரை அங்கு வேலை செய்தேன்.

2001ல் தமிழகத்தில் தி.மு.க.தோல்வியடைந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் சன் டி.வி.யில் மேனேஜிங் எடிட்டராக சேர்ந்தேன். அடுத்து 2004ல் வந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து தி.மு.க. வெற்றி பெற்ற நாளில் சன் டிவி வேலையில் இருந்து விலகினேன். Panos South Asia வாய்ப்பு காரணமாக சன் டி.வி. வேலையை விடவேண்டி வந்தது. ‘Panos’ல் 2004 பிப்ரவரி மாதமே வேலை கிடைத்து விட்டது என்றாலும், தேர்தல் நேரத்தில் சன் டிவி வேலையை விடுவது சரியல்ல என்ற காரணத்தால் அது முடியும்வரை அங்கு வேலை பார்த்தேன். தேர்தல் முடிந்த நாளே அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.

இந்த மாறுபட்ட வேலைகளுக்கிடையில் உங்களுக்கான அரசியல் எங்கு கட்டமைக்கப்பட்டது? வாசிப்பின் மூலமாகவா அல்லது மீடியாவில் பணிபுரிந்ததால் ஏற்பட்ட தாக்கமா?

என்னை மாதிரியான பின்னணியில் இருந்து வருகிறவர்கள் மக்கள் இயக்கங்களுக்கு எதிரான நிலையை மிகச்சுலபமாக எடுத்து விடுவார்கள். தன்னுடைய வேலை காரணமாக மிகச் சவுகரியமான ஒரு நிலையில் இருந்து கொண்டு, மக்கள் அரசியலுக்கு எதிரான நிலையை எடுக்கும் குணம் பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியும். பார்ப்பனர்கள் வெற்றி பெற்ற பிறகு அதற்கு காரணமானவற்றை மறந்து விடுவதில்லை. பார்ப்பனரல்லாதவர்கள் தங்களுக்கு ஒரு சவுகரியமான நிலை வந்தவுடன், ‘இனி எதுக்கு சாதியைப் பத்திப் பேசணும் அதெல்லாம் அந்தக்காலத்து விஷயம்’ என்று சொல்லி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள்.

எனக்கு இதெல்லாம் மிக உறுத்தலான விஷயமாக இருந்தது. 67ல் தி.மு.க. ஆட்சி அமையவில்லையென்றால் பார்ப்பனரல்லாதவர்களில் இத்தனை பேர் நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா? ரத்தினவேல் பாண்டியன் உச்சநீதிமன்ற நீதிபதியாகியிருக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தது. பார்ப்பனர்களை விட, பார்ப்பனரல்லாதார் அதிகமாக தகுதி, தரம், திறமை குறித்துப் பேசும்போது எனக்கு எரிச்சல் அதிகமாகியது. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் நம் அறிவியல் கொள்கை குறித்து நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தகுதி, தரம் என்பது பற்றிய எந்தவொரு மயக்கமும் எனக்கு ஏற்படாமல் போகச்செய்தது. நம்முடைய அறிவியல் துறையில், உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் உயர்ஜாதியினர் தான். அவர்களிடம் நேர்மை என்பது துளிகூட இருப்பதில்லை. இதை நேரில் கண்டதால்தான் விஞ்ஞானத்தையும் பொருளாதாரத்தைம் அரசியல் பார்வை இல்லாமல் பார்க்க முடியாது என்பதும் தெரிய வந்தது.

இதற்கு உங்கள் வாசிப்பு எந்தவகையில் உதவி செய்தது. நீங்கள் சின்ன வயதில் இருந்து எந்த மாதிரியான புத்தகங்களை வாசித்தீர்கள்?

வாசிப்பு என்பது எனக்கு எப்போதும் நேர்க்கோட்டில் இருந்ததில்லை. 1978ல் நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது எமர்ஜென்சி காலகட்டம். அரசியல் அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் நான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்தது கு.அழகிரிசாமி கதைகள் தான். அதன்பிறகு புதுமைப்பித்தன் படைப்புகள் உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கியங்களைப் படித்தேன்.

பின்னர் அரசியல் ரீதியான புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரையும் போல முதலில் எனக்கும் மார்க்சியம் தொடர்பான புத்தகங்களில் தான் ஆர்வம் அதிகம் இருந்தது. 1980ல் சி.பி.ஐ., சி.பி.எம்., இரண்டு கட்சிகளும் எம்.ஜி.ஆருடன் கூட்டு வைத்தன. இது எனக்கு மிகவும் கோபத்தை வரவழைத்தது. இந்த நேரத்தில் தான் ‘கோட்பாடுகளும் கொள்கைகளும் வேறு, அரசியல் கட்சி என்பது வேறு’ எனப் புரிய ஆரம்பித்தது. எழுத ஆரம்பித்ததும் அந்தக் காலகட்டம்தான்.

அந்த நிலைப்பாடு இப்போதும் இருக்கிறதா?

ஆமாம், கட்சிகளைத் தாண்டி, மேலே நிற்பது இயக்கங்களும், அவற்றின் கொள்கைகளும்தான். அதற்காக கட்சிக்குள் இருப்பவர்கள் இயக்கவாதிகள் இல்லையென்று அர்த்தமல்ல. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.க., பெரியார் திராவிடர் கழகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தாலும் அதற்கு மேலே இருப்பது பெரியார் ஆரம்பித்து வைத்த சுயமரியாதை இயக்கம். அதேபோல் சி.பி.ஐ.,சி.பி.எம்., எம்.எல். என எத்தனை கட்சிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேலே இருப்பது இடதுசாரி இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களும் கட்சிகளை விட பெரியதாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

கட்சிகளை விட இயக்கம் பிரம்மாண்டமானது என்கிறீர்களா?

கொள்கைகளால் ஏற்படும் தாக்கமும் அது கொண்டு வரக்கூடிய பயனும் கட்சிகளுக்கு மேற்பட்டது. ஜெயலலிதாவைப் பற்றி இதுவரை நான் எந்த ஒரு நல்ல வார்த்தையும் பேசியதோ, எழுதியதோ இல்லை. அப்படி சொல்லும்படியான சூழ்நிலையை அவர் ஒரு நாளும் உருவாக்கியதில்லை. அத்தகைய ஜெயலலிதா சங்கராச்சாரியாரை கைது செய்த போது தமிழ்நாடு முழுவதும் ‘அது சரிதான்’ என்கிற மாதிரியான ஒரு மனநிலை இருந்தது. அது அ.தி.மு.க ஏற்படுத்திய மனநிலை அல்ல, பரந்துபட்ட திராவிட இயக்க மனநிலையாகும்.

அதேதான் மார்க்சியத்திற்கும் மார்க்சியம் சார்ந்த விஷயங்களுக்கும். நந்திகிராம் விஷயத்திற்காக சி.பி.எம்.,கட்சியை எதிர்ப்பதோ, எமர்ஜென்சியை ஆதரித்ததற்காக சி.பி.ஐ., கட்சியை இடதுசாரி இயக்கம் இல்லை என்று சொல்வதோ அந்தந்த காலகட்டத்திற்கான குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். இவற்றை மட்டுமே வைத்து இடதுசாரி இயக்கம் இவ்வளவுதான் என்று கூற முடியாது.

கட்சிகளை மீறி சிறந்த கொள்கைவாதிகளாக விளங்கும் அரசியல்வாதிகள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். அடிப்படை விஷயங்களில் அவர்கள் நீர்த்துப் போகமாட்டார்கள். எதிர்காலத்தில் நல்லக்கண்ணு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பி.ஆர்.ஓ.வாக செயல்படுவார் என்று சொன்னால், அதை நான் நம்பத் தயாராக இல்லை. காரணம் கட்சியைத் தாண்டி அவரிடம் இருக்கும் இயக்கத்தின் தாக்கமும் அதனால் அவரிடம் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும்தான்.

இங்குள்ள அரசியல்வாதிகள் மீது பலவிதமான விமர்சனங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பல நிர்ப்பந்தங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர்களைத் திட்டுவதை விட அவர்களை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிறேன்.

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

ஓர் இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன, அதைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் கையாண்ட முறை என்ன, அதில் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் – இந்த மூன்றில் இருந்து தான் அந்த இயக்கத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க முடியும்.

திராவிட இயக்கத்தினர் அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். திராவிட இயக்கத்தின் அடிப்படையே சமூகநீதிதான். அதாவது சாதிக்கு எதிரான போர் அல்லது அனைவருக்கும் சமவாய்ப்பு. இதை திராவிட இயக்கம் சாதித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் 67 சதவீதம் என்பதைத் தாண்டி ஒரு கட்சியால் அரசு என்ற அமைப்பின் மூலமாக வேறெதுவும் செய்துவிட முடியாது. இது வெற்றி தான். இதற்குள் குறைகள் இல்லையா என்று கேட்டால் அது procedural பிரச்சினை. அது கட்சியின் பிரச்சனை அல்ல.

இட ஒதுக்கீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வரும் முரண்பாடுகள் சில இருக்கலாம். ஆனால் அடிப்படையில் இட ஒதுக்கீடு வெற்றி பெற்று விட்டது.

மற்றொரு கருத்து இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை திணித்து விட்டதாக சொல்லப்படும் கருத்து. இது முழுக்க முழுக்க அரசியல் பார்வையே இல்லாத குற்றச்சாட்டு. இங்கு யாரும் ஆங்கிலத்தை திணிக்கவில்லை. தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பத்தினால். இந்தி திணிக்கப்பட்டது, அதை எதிர்த்தார்கள். ஆங்கிலம் விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

A.S. Pannerselvan சுய விருப்பம் தான் அரசியல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய அரசு இங்கே இருக்கிறது. அந்த சுய விருப்பத்தையே தவறு என்று சொன்னால் சொல்பவர்களுடைய அரசியல் பார்வையே தவறு என்றாகி விடுகிறது. தனித்தமிழ் ஆர்வலர்கள் மீது எனக்கு இருக்கக்கூடிய வருத்தமே இதுதான். விரும்பி ஏற்றுக் கொள்வதற்கும், மிரட்டி திணிப்பதற்குமான அடிப்படை வேறுபாடே அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

அடுத்து, இன்று யாரும் மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்வதில்லை. தமிழ்நாடு என்று தான் சொல்கிறார்கள். எந்த தமிழ்ப் பத்திரிகையும் உபாத்தியாயர் என்று எழுதுவதில்லை ஆசிரியர் என்று தான் எழுதுகின்றன. எல்லாவற்றிலும் தமிழ் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற வாசகத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். இன்று வட இந்தியர்கள் ‘தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது’ என்று குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சமூக, பொருளாதார மாற்றங்களால் மற்ற மாநிலங்களை விட அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள் தான். அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.

1950ல் இந்தியா குடியரசான பிறகு முதல் அரசியல் சட்டத்திருத்தமே இட ஒதுக்கீடுக்கானது. இதைச் சாதித்தது தமிழ்நாட்டின் திராவிட இயக்கம்தான். ஓமந்தூராரும், காமராசரும் நேருவை வற்புறுத்தி அதைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திராவிட இயக்க பாதிப்புடையவர்களாகவே இருந்தனர். அவர்களை நான் திராவிட இயக்கத்தினராகவே பார்க்கிறேன். இதைத்தான் கட்சியைத் தாண்டி இயக்கம் இருக்கிறது என்று சொன்னேன்.

இதை தொடர்ச்சியாகவே பார்க்கலாம். இந்த சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இலவச ஆரம்பக்கல்வி தமிழ்நாடு முழுவதும் வருகிறது. மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வர மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப்படுகிறது. அடுத்தபடியாக தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு அரசுக்கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. உயர்கல்வியும் இலவசமாக்கப்படுகிறது.

அடுத்தபடியாக 80களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகத் தொடங்கின. என்ன படித்து விட்டு வெளியே வந்தாலும் அடுத்து மேலே படிப்பதற்கு வசதியாக உயர் கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார்கள். இவையெல்லாம் வெவ்வேறு கட்சியினரால் வெவ்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்டவை என்றாலும், அதற்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது திராவிட இயக்கமும், அதன் கொள்கைகளும்தான்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் விவசாயிகள் தற்கொலை இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாயத்தை மட்டுமே நம்பி யாருமில்லை. Non farm activities 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இதற்குக் காரணம் திராவிட இயக்கத்திலிருந்து வந்த தி.மு.க.தான். 1967 முதல் 76 வரையிலான காலகட்டத்தில் அவர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்து செயல்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்கள்.

மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் பெரிய தொழிற்சாலைகள் இருக்குமிடம் மும்பை. அடுத்து புனே, நாக்பூரை குறிப்பிடலாம். இந்த மூன்று நகரங்களைத் தவிர வேறெங்கும் தொழிற்சாலைகள் கிடையாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சென்னையைத் தவிரவும் ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஓசூர், கரூர், கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மணலி, சிறுசேரி, கடலூர், மறைமலைநகர், திருச்சி, மதுரை, நெல்லை என தொழிற்சாலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் (இராமநாதபுரம் மாவட்டத்தைத் தவிர) ஒன்று அல்லது இரண்டு தொழிற்பேட்டைகள் இருப்பதைப் பார்க்க முடியும்.

இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒரு விஷயம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி.

ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளுக்கேற்ப இயக்கங்களும், தலைவர்களும் தோன்றியிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ராஜாராம் மோகன்ராய் விதவைகள் மறுமணம், கோவில் நுழைவு உரிமை இவற்றைத் தாண்டி இயங்கவில்லை.

கேரளாவில் சமூகத்தை சீர்திருத்த வந்த நாராயணகுரு ஈழவத்தலைவராகவும், மஹாராஷ்டிராவின் ஜோதிராம் புலே தலித் தலைவராகவும் சுருங்கி விட்டார்கள். இதில் பெரியார் ஒருவர் தான் மிகப் பிரம்மாண்டமாய் எழுந்தார். அவர் ஒருவர் தான் சாதி என்ற அமைப்பையே எதிர்த்தார். 3 Vs 97 (பார்ப்பனர் Vs பார்ப்பனரல்லாதவர்) என அவர் பிரித்தது தான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

சேது பாலம் விவகாரத்தில், ஜெயலலிதா கருணாநிதியிடம் ‘தைரியமிருந்தால் இதே கருத்தை வட இந்தியாவில் பேச முடியுமா?’ என்று கேட்கிறார். பெரியாருக்குப் பிறகு வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் அவரது கருத்துகளை இந்தியா முழுவதும் கொண்டு சென்றிருந்தால் இந்த மாதிரியான கேள்விகள் எழுந்திருக்காது அல்லவா?

திராவிட இயக்க வரலாறு என்பது கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாறல்ல. 1917ல் தியாகராயர், நடேசன் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்கும் தேதிவாரியாக சொல்ல முடிகிற, நம் கண்முன் நடந்த வரலாறு. மிக சமீபத்தில் நடந்த விஷயம் எவ்வளவு வேகமாக மற்ற இடங்களுக்குப் பரவ முடியும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

அடுத்ததாக, உங்களுடைய முக்கிய பணி உங்கள் ஊரிலா அல்லது வேறு ஊரிலா என்று கேள்வி வந்தால் உங்கள் ஊருக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

ஜெயலலிதாவிடம் ஒரே கேள்வி தான். அவர் ஒரு வட மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு, பூரி சங்கராச்சாரியாரைக் கைது செய்துவிட்டு தொடர்ந்து அங்கே முதல்வராக இருந்துவிட முடியுமா? இங்கு முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இது பெரியார் பிறந்த மண். 1920களில் பெரியார் ஏற்படுத்திய தாக்கம் தான் சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு இங்கு மதக்கலவரமோ, இனக்கலவரமோ நடக்காமல் தடுத்தது.

ஜெயலலிதாவிடம் இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை அவர் யாரிடமும் உரையாடுவதற்கோ, விவாதத்திற்கோ வருவதில்லை. யாரோ எழுதியதை படித்துவிட்டுச் சென்று விடுவார். அதுதான் பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு உரையாடலில் அவர் அமர்ந்தாலே போதும். ஐந்தாவது நிமிடத்தில் அவரது எல்லா முரண்பாடுகளும் வெளிப்பட்டு விடும்.

திராவிட இயக்கம் பெரியார் காலத்தில் இருந்த வீச்சோடு இப்போதும் இருக்கிறதா? இல்லை வெறும் மொழி அரசியலாக சுருங்கி விட்டதா?

பெரியார் மிகப்பெரிய அளவில் செயல்பட்டார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் பெரியாருக்குப் பிறகு வந்த அவரது இயக்கத்தினர் அவரது எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர் அளவுக்கு வீச்சாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இன்றைக்கு இயங்கிக் கொண்டிருப்பது ஒரு இயக்கம் உருவானதற்குப் பிந்தைய சமூகம். அந்த இயக்கத்தின் தாக்கம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் நாத்திகர்களாக இருக்கிறார்கள், சிலர் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள், சிலர் மொழிப்பற்று உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெரியார் வைத்த அடிப்படைக் கருத்து என்பது அதிகாரப் பங்கீடு, அதிகாரப் பரவலாக்கல்.

சனாதன தர்மம் அதிகாரத்தை ஒரு சாராரிடமே குவிக்காமல் இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவமரியாதை ஏற்பட்ட போது சுயமரியாதை இயக்கம் தோன்றியது. எனக்கு இன்றைக்கு அவமரியாதை இல்லை என்று தோன்றும்போது, அன்றைக்கு இருந்த வீச்சோடு இன்றைக்கும் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது.

இன்று அதிகாரத்தில் இருப்பது நாம்தான், முக்கிய முடிவுகளை எடுப்பதும் நாம்தான் எனும்போது அந்த அளவுக்கு வீச்சு தேவையில்லை.

அதிகாரப் பரவலாக்கம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை. இந்த அதிகாரப் பகிர்வு பரவும்போது திராவிட இயக்கக் கொள்கைகள் நீர்த்தது போலத் தோன்றும். எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களே இருக்கும்போது அதை எதிர்த்து அதிகமாக இயங்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று மாற்றங்கள் வந்திருக்கிறது. நமக்கான முடிவுகளை நாமே எடுக்க முடிகிறது எனும்போது இன்றும் அதே அளவு கூர்மையுடன் எப்படி செயல்பட முடியும்? அப்படி செயல்பட்டால் அது நமது வெற்றியை நாம் மதிக்கவில்லை என்றுதான் பொருள்.

67ல் அரசியல் அதிகாரம் வந்தது. 80களில் பொருளாதார ரீதியான மாற்றங்கள் வருகிறது. முன்பு பார்ப்பனர்களின் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக செட்டியார்களின் தொழில் நிறுவனங்கள் தான் இருக்கும். இன்று நிலைமை மாறி 70 சதவீத தொழில் நிறுவனங்கள் பார்ப்பனர், செட்டியார் அல்லாதவர்களிடம் தான் இருக்கிறது. இன்று அவமரியாதை குறைந்திருக்கிறது. அவமரியாதை குறைந்திருக்கும் போது சுயமரியாதை இயக்கம் அதே வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

திராவிட இயக்கம் என்பது வெற்றிடத்தில் கட்டப்பட்டதல்ல, சமூக, பொருளாதார காரணிகளின் மீது கட்டப்பட்டது. இப்போது அந்தக் காரணிகள் மாறியிருக்கும்போது இயக்கம் மட்டும் எப்படி அதே வீச்சோடு இருக்க முடியும்? அந்த வீச்சு மாறக்கூடாது என்று சொல்பவர்கள், ‘மாற்றம் என்பதே வரக்கூடாது’ என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் முன்வைக்கும், இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முழுமையாக பதிவாகாமல் போனதற்கு என்ன காரணம்? இன்றைக்கு இருக்கிற ஒரு சில பதிவுகள் பெரும்பாலும் தனிநபர்களின் விருப்பத்தினால் ஏற்பட்டதுதானே?

இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். 67ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. 74ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பெரியார் பேச்சுகள் பாடமாக்கப்படுகிறது. தவிரவும் பார்ப்பனரல்லாதவர்கள் 80களுக்குப் பிறகுதான் இந்த எழுத்துத்துறைக்குள் வருகிறார்கள். மற்ற இயக்கங்களைப் பற்றி போதுமான அளவுக்கு அகடாமிக் பதிவுகள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் வேறு. உதாரணத்திற்கு காங்கிரஸ் இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் பெரிய பலம் அவர்கள் அதிகாரத்துக்கு வரும்போதே ஓரளவுக்கு கல்வியறிவுடன் வருகிறார்கள்.

நேருவையும் கலைஞரையுமே ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞர் திருவாரூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் பிறகு எழுத்து, நாடகம் என அவரது பயணம் தொடங்குகிறது. பெரிய படிப்பெல்லாம் அவருக்கு இல்லை.

நேரு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமான ‘ஹேரோ’விலும், அடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. அந்த இடைவெளி இப்போதுதான் நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக நாம் வருத்தப்படவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை. நாம் 80களில் இறுதியிலே ஆரம்பித்து அதிலிருந்து தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்த இடத்திற்கு வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. வந்தபிறகு நம்முடைய வேலையை நாம் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் யதார்த்தம். அவர்கள் அளவுக்கு எல்லாவற்றிலும் நாம் சரிக்குச் சமமாக இருப்போமேயானால், இந்த இயக்கம் தோன்றியதற்கான அவசியமே இல்லையே? எனவே நாம் ஒன்றுமே செய்யவில்லை என நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பல்கலைக்கழகத்தில் நுழைய இடம் கேட்பவனிடம், ‘நீ எழுதிய புத்தகம் ஏன் பல்கலைக்கழகத்தில் இல்லை’ என்று கேள்வி கேட்டால் அந்தக் கேள்வியிலேயே உள்முரண்பாடு உள்ளது. இங்கு எதுவும் நடைபெறவில்லை என புலம்பிக் கொண்டிருப்பதால், நடக்கும் விஷயங்களைக் கூட ஒருவர் மற்றவரிடம் பரிமாறிக் கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.

சுயமரியாதை இயக்கப் பெண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் எழுதிய ஸ்ரீலதா பற்றியோ, வ.கீதாவின் பங்களிப்பு பற்றியோ, எஸ்.வி.ஆர். பெரியார் கட்டுரைகள் அனைத்தையும் இணையத்தில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதையோ, தங்களிடம் இருக்கும் பெரியாரின் படைப்புகளைக் கொடுத்தால் அவர் வெளியிடுவார் என்பதையோ நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்வதே இல்லை. சொல்லிவிட்டோம் என்றால், ‘நாம ஒண்ணுமே பண்ணலே’ன்னு இனி ஒப்பாரி வைக்க முடியாது என்பதால் சொல்லாமல் இருக்கிறோமா?

சுயமரியாதை இயக்கத்தில் இருக்கும் நாம் ஏன் நம்முடைய வெற்றிகளை சுயமரியாதையுடன் கம்பீரமாகக் கொண்டாடுவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அப்படிக் கொண்டாடியிருந்தால் இந்த மாதிரியான கேள்விகளுக்கான அவசியமே இருந்திருக்காது.

பெரியாரின் விருப்பத்திற்கு மாறாக அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். இதனால் திராவிட இயக்கம் அடைந்த பலன் என்ன, பாதகம் என்ன?

என்னைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்கிற விஷயத்தில் காந்தியை விட நேருவிடமும், பெரியாரை விட அண்ணா, கலைஞரிடமும் அதிக மரியாதை உண்டு. காரணம் இவர்கள் தங்கள் கைகளில் கறைபடிவதற்கு அனுமதித்துக் கொண்டார்கள். மார்க்சை விட லெனின் பெரிய ஆள். ஏனெனில் அவர் கொள்கைகளை மட்டும் பேசாமல் ஒரு அரசையும் நடத்த வேண்டியிருந்தது.

நீங்கள் நம்பும் ஒரு கொள்கையை, அரசு என்கிற இயந்திரத்தோடு தினந்தோறும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். இதுதான் மிகக்கடினமான பணி. அரசியலில் நுழையும்போது தன் மீது புழுதி வாரி இறைப்பார்கள் என்பதும், சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிவரும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் மாற்றம் என்பது அந்த அரசு இயந்திரத்தினால் தான் சாத்தியம் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள்.

வள்ளுவனாக இருப்பது சுலபம். வள்ளுவன் சொல்படி கேட்டு நடக்கிற அரசனாக இருப்பது கடினம். தத்துவத்தை முன்வைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் எழாது. தத்துவத்தை செயல்படுத்துபவன் சிலுவையை சுமக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்குமான அமைப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இருந்தன. ஆனால் நாளடைவில் சிறுபான்மையினரும், தலித்துகளும் அதிலிருந்து விலகி தங்களுக்கென தனி அமைப்புகளையும், கட்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். இன்று தலித் இயக்கங்கள் எதிர்நிலையில் இருந்து திராவிட இயக்கத்தை விமர்சிக்கிற அளவுக்கு சென்றுவிட்டனர். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

தமிழ்நாட்டு தலித் மக்கள் மட்டும் இப்படி சென்றுவிடவில்லை. அம்பேத்கர் நூற்றாண்டிற்குப் பின், இந்திய அளவில் தலித் மக்களிடையே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

பெரியார் என்ற iconக்குப் பதிலாக அம்பேத்கர் என்ற icon-ஐ முன்வைத்தால் தலித் இயக்கங்களுக்குக் கிடைக்கக்கூடிய சாதகம் வேறுமாதிரியானது. இதுவும் 80களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் தான்.

அதேபோல் இஸ்லாமியர்களிடம் ஏற்பட்ட மாற்றமும். ஆரம்பத்தில் தமிழ் அடையாளமும், இஸ்லாமிய அடையாளமும் வேறாக இருந்ததில்லை. உமறுப்புலவரில் ஆரம்பித்து உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் 80களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் இவர்களும் ‘உலக அளவில் முஸ்லிம்கள்’ என்ற குடைக்குள் சென்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கம் என்பதும் தமிழ்நாடு என்பதும் சுருங்கிய இடமாகவும், இஸ்லாம் என்பது விரிந்த பரவலான ஒரு தளமாகவும் தெரிகிற ஒரு பிரச்சனை இருக்கிறது.

திராவிட இயக்கங்கள் தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு அவர்களது பிரச்சினைகள் சிலவற்றையாவது சரிசெய்தார்கள் என்பதும் உண்மை.

திராவிட இயக்கங்கள் தலித், சிறுபான்மையினர் நலனில் முழு அக்கறை செலுத்தாதது மட்டுமே அவர்கள் விலகிச் சென்றதற்கான காரணமல்ல. அதை விட Pan Indian Dalit mobilization, Pan Islamic mobilization என்கிற உலகளாவிய பார்வையால்தான் அவர்கள் தங்களுக்கென ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் 19 சதவீத தலித் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 19 சதவீதம் என்பது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த அதிக எண்ணிக்கை தரக்கூடிய பலம், நம்பிக்கை பெரியது இல்லையா? அதை எப்படி தலித் மக்கள் இழப்பார்கள்? அப்படி எதிர்பார்ப்பதும் சரியல்லவே!

அதனால் தான் தி.மு.க.வின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக இருந்த கிருஷ்ணசாமியும், தி.மு.க. உறுப்பினராக இருந்த திருமாவளவனும் தனித்தனி கட்சி ஆரம்பித்து தலித் தலைவர்களாக ஆகியிருக்கின்றனர். இந்திய அளவில் இருக்கிற தலித் மக்களின் எண்ணிக்கை தருகிற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். இதை சரி அல்லது தவறு என்று சொல்வதற்கு மீதி பேருக்கு உரிமையில்லை.

அம்பேத்கரை முன்வைப்பதா, புலேவை முன்வைப்பதா என்று கேட்டால் அவர்கள் அம்பேத்கரை முன்வைக்கிறார்கள். அம்பேத்கரை முன்வைத்தால் கூடுதல் பலம் கிடைக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கக்கூடிய பிரச்சனை அல்ல. இங்கு பள்ளர், பறையர், அருந்ததியர் என்று மூன்றே பிரிவு தலித்துகள் இருப்பதால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. வடக்கே செல்லச்செல்ல இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலாகியிருப்பது தெரியும். பீகாரில் மட்டும் தலித்துகள் எட்டு பிரிவுகளாக இருக்கின்றனர். அங்கு தலித் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுவது அவர்களுக்கு நல்லதுதானே!

ஒரு தலித் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில்தான், இன்று கிருஷ்ணசாமி அத்வானியையோ, சோனியாவையோ சந்தித்துப் பேச முடிகிறது. வெளிப்படையாகப் பேசினால், கிருஷ்ணசாமியோ, திருமாவளவனோ வேறு கட்சிகளில் இருந்து கொண்டு ‘எங்களுக்கு இந்த மாவட்டங்களில் தலித் மக்களிடம் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வைக்கிறோம், நாடாளுமன்றத் தொகுதியில் 6 சதவீத வாக்குகளை பெற்றுத் தருகிறோம்’ என்று சொன்னால் வாய்ப்பு கொடுத்து விடுவார்களா?

இவர்களுக்கு பரந்துபட்ட அங்கீகாரத்தை தலித் என்கிற அடையாளம் தருகிறது. நான் தலித் தலைவர் என்று சொல்லும்போது அகில இந்திய அளவில் ஓர் இடம் கிடைக்கிறது. வேறொரு கட்சியில் இருந்து கொண்டு, ‘திருநெல்வேலியில் தாமிரபரணிக் கரை வரை எனக்கு செல்வாக்கு இருக்கிறது. தாமிரபரணி கன்னியாகுமரியைத் தொடும் இடத்தில் என்னுடைய செல்வாக்குப் போய்விடும்’ என்று கிருஷ்ணசாமி சொன்னால் அவருக்கு என்ன மரியாதை இருக்கும்? கருப்பசாமி, பி.ஹெச்.பாண்டியன் போல அவரும் வட்டார அரசியல்வாதியாக சுருங்கி விடுவார்.

ராமதாஸ் மொழி, கலாச்சாரம் குறித்து திடீரென்று பேச வேண்டிய அவசியம் என்ன? அவருடைய செல்வாக்கு என்பது விழுப்புரம் தொடங்கி சின்னசேலம் வரைதான். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் அவரும் பொன்முடியும் ஒன்றாகி விடுவார்கள். அதனால் தான் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வேறு விஷயங்கள் அவருக்குத் தேவைப்படுகின்றன. இது அரசியல் நிர்ப்பந்தம். இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே தேர்தல் அரசியலை எதிர்கொள்ள முடியும்.

நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டாலும், திராவிட இயக்கங்களிலிந்து வெளியேறி தங்களுக்கென ஒரு அமைப்பைத் தொடங்கியவர்கள், திராவிட இயக்கத்தின் பங்களிப்பை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். அதைக் கண்டித்து, எந்த திராவிட இயக்க அரசியல்வாதியும் பேசுவதில்லை. பேசினால், தங்களை தலித் விரோதி என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறதா?

தலித் விரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அச்சம் மட்டுமே பதில் சொல்ல விடாமல் என்னைப் போன்றவர்களைத் தடுக்கவில்லை. எவ்வளவு விமர்சித்தாலும் பிரச்சனை என்று வரும்போது இவர்களும் நம்முடன் இணைந்து தான் செயல்படப் போகிறார்கள். விமர்சிப்பதன் மூலம், இவர்களையும் எதிராளியாக மாற்றிவிட வேண்டாம் என்கிற ஒரு பார்வை இருப்பதுதான் காரணம்.

உதாரணமாக ரவிக்குமார் பெரியாரை விமர்சித்தபோது, அதற்கு எதிராக சர்வதேசப் பத்திரிகைகளில் என்னால் எழுதியிருக்க முடியும். இவர் மாதிரியான எழுத்தாளர்கள் எழுதுவது குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. அதற்குப் பதில் எழுதினால், பெரியார் தலித் மக்களுக்கு விரோதியா என்ற விவாதம் மேலும் பல இடங்களுக்குப் போகும். அதை நான் விரும்பவில்லை.

திராவிட இயக்கத்தை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆட்கள் விமர்சித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டம் தலித்துகளின் காலகட்டம். நாளை சிறுபான்மையினர் விமர்சித்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. இதற்காக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

மற்றொருபுறம் விமர்சிப்பவர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்றிவிட வேண்டாம் என்ற எண்ணமும் என்னைப் போன்ற பலருக்கு இருக்கிறது. இன்று தலித்களுக்காக கண்ணீர் விட்டு உருகி, ‘நீயும் இந்துதான்’ என்ற போர்வையில் நிற்பது ஆர்.எஸ்.எஸ்.ம், பார்ப்பனர்களும் தான். நாம் இந்த மாதிரியான தலித் எழுத்தாளர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை இன்னமும் பார்ப்பனர்கள் பக்கம் தள்ளிவிட வேண்டுமா?

திராவிட இயக்கங்களை விமர்சிப்பது ஒருபுறமிருக்க, இப்போது ‘தலித் – பார்ப்பனக் கூட்டணி’ என்ற ஒன்றை ரவிக்குமார், அவுட்லுக் ஆனந்த் போன்றவர்கள் சொல்கிறார்களே, இது எந்தளவிற்கு வெற்றி பெறும்? எந்தளவிற்கு சரி?

குஜராத்தில் நரேந்திரமோடியின் வெற்றியை வேறு எந்த மாநிலத்திலும் பரப்பிவிட முடியாது. அது குஜராத்தில் மட்டும்தான் சாத்தியம். அதேபோலத் தான் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி செய்ததை தமிழ்நாட்டில் செய்துவிட முடியாது. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி எல்லாமே எண்ணிக்கை என்ற அடிப்படையில் வந்து நின்று விடும்.

உத்திரப்பிரதேசத்தில் 12 சதவீதம் பார்ப்பனர்களும், 19 சதவீதம் தலித்துகளும் இருக்கிறார்கள். தேர்தலில் நடைபெறும் மும்முனை அல்லது நான்குமுனைப் போட்டியில் யார் முப்பது சதவீதம் வாங்குகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட முடியும். தமிழ்நாட்டில் 3 சதவீதம் மட்டுமே பார்ப்பனர்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது வெற்றி பெறும் கூட்டணியாக இருக்காது. தலித் பார்ப்பனக் கூட்டணி மீது சிலருக்கு இருக்கும் மயக்கமெல்லாம், ஒரு தேர்தலில் போட்டியிட்டு தோற்றால் தானாக தெளிந்துவிடும்.

ஒரே தேர்தலில் தெளிந்து விடக்கூடிய பித்தத்துக்கு நாம் ஏன் மருந்து கொடுக்க வேண்டும்? தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தான் ஒன்று சேரமுடியும்.

இதுபோல தலித் அரசியலில் வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அரசியல் என்பதே பன்முக அடையாளங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நான் ஒரு ஆண், பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவன், நகரத்தில் வளர்ந்தவன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் என எனக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன.

ஆனால் ‘தலித் என்கிற ஒரு அடையாளம் போதும், மொழியும் தேவையில்லை, இடமும் தேவையில்லை’ எனும்போது நீங்கள் எங்கே செயல்படப் போகிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. அதாவது ஒரு போராட்டம் என்று வரும்போது அது யாருக்கானது, எங்கே நடக்கிறது, எந்த மாதிரியாக நடைபெறுகிறது என்பது மிக முக்கியம்.

திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. திராவிடர்களை மேலும் முன்னேற்றவே திமுக உருவானது என்ற பொருள் அதில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தாலும், அவர்களது போராட்டக்களம் இங்கேதான் என்பதைத் தெளிவாக்கினார்கள்.

தலித்துகளைப் பொறுத்தவரை அவர்கள் போராட்டத்துக்கான இடம் என்பது இங்கு இல்லை. அகில இந்திய கட்டமைப்பை முன்வைக்கிறார்கள். அகில இந்திய கட்டமைப்பு ஒன்றா என்றால் இல்லை, அதற்குள் பல முரண்பாடுகள் இருக்கின்றன. இதை எதிர்கொள்ளாமல் இருப்பது தலித் அமைப்புகளின் பிரச்சனை. இதை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அருந்ததியர் நிலையும், தேவேந்திரகுல வேளாளர் நிலையும் ஒன்றா? இரண்டும் ஒன்றே எனக் கூறி இருதரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படிப் பேசினால், தலித் ஒற்றுமை பாதிப்படையும் என்று கூறுவது சரியல்ல. உள்முரண்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, பன்முகத்தன்மையுடன் இயங்க வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்குள் இருக்கும் பிரச்சனையும் இந்த ‘ஒற்றை அடையாளம்’ தான். உருது பேசுகிற முஸ்லீமும், தமிழ் பேசுகிற முஸ்லீமும் ஒன்றா? பாகிஸ்தான் முஸ்லிமும் இந்திய முஸ்லீம்களும் ஒன்றா? ஒஸாமாவும் மற்றவர்களும் ஒன்றா?

உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேருங்கள் என்பது சரிதான். ஆனால் அப்படி சேரும்போது, அந்தந்தப் பகுதி முஸ்லீம்களின் அடையாளங்கள் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் சூஃபி இயக்கத்தின் கூறுகள் மிகவும் செழுமையானவை. ‘Pan Islamic mobilization’ என்றபோது, இத்தகைய கூறுகள் அடிபடத் தொடங்குகின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது.

தலித்களோ, முஸ்லீம்களோ, யாரெல்லாம் தங்களுடைய அடையாளத்தை நிலப்பரப்புக்கு அப்பால் விரித்துக்கொள்கிறார்களோ அப்போதெல்லாம் பிரச்சனை வரத்தான் செய்யும். இங்கே, இந்துத்துவா சக்திகள் ‘ஏக இந்தியா’ என்று சொல்வதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பல முரண்பாடுகளை மறைத்து ஒன்றை கட்டமைக்க விரும்பினால் அந்த முரண்பாடுகளே உங்களை உடைத்து விடும். ஒரு தலித்துக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முதலில் அவன் ஒரு தமிழன், கலைகளோடு சம்பந்தப்பட்டவன். அவனுக்குப் பாடத் தெரியும், மருத்துவம் தெரியும். இந்த மண்ணின் உயிர்ப்பு சக்தியாக அவன் இருந்திருக்கிறான். இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் தலித் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

திராவிட இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஏராளமான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதன் மூலம் கருத்துகளை பரவலாக கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் இன்றைக்கு அந்த இடத்தை பார்ப்பன ஊடகங்கள் பிடித்துக்கொண்டு, இட ஒதுக்கீடு முதலான சமூக நீதிப் பிரச்சினைகளுக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகின்றன. அதே நேரத்தில் இன்றைக்கு திராவிட இயக்கங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் கூட இயக்கக் கருத்துகளை பேசுவது கிடையாது. இயக்க தொலைக்காட்சிகளும் முழுவதும் வணிக நோக்கில் தான் செயல்படுகின்றன. திராவிட இயக்க கருத்துகளை முன்வைப்பதற்கு இடமில்லாததுபோல் தோன்றுகிறதே?

இதே கேள்வி என்னிடம் பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி, ‘நீங்கள் எதிலாவது எழுத முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா, கருத்து சொல்வதற்கு முன்வந்து இடமில்லாமல் போயிருக்கிறதா’ என்று. அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை.

என்னிடம் நிறைய பேர் எழுதச் சொல்லி கேட்கிறார்கள். அலுவலக வேலை காரணமாகவும், நேரமில்லாததாலும் என்னால் எழுத முடியவில்லை. என் நண்பர்களும், ‘அந்தப் பத்திரிகையில் எழுதச் சொல்லி கேட்கிறார்கள். என்னால்தான் முடியவில்லை’ என்று சொல்கிறார்கள்.

பத்திரிகைகள் வணிகமயமாகி இருக்கிறது என்று சொன்னால், அது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பிரச்சினையல்ல, உலகம் முழுவதும் இருக்கிற பிரச்சினை. அதையும்மீறி, எழுதத் தெரிந்தவர்களுக்கு அவர்களது கருத்துகளைச் சொல்ல இடம் இருக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு format இருக்கிறது. அதற்கு உட்பட்டு நாம் எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்து பத்திரிகையில் புத்தக விமர்சனம் என்றால் 900 வார்த்தைகள்தான். அதை மீறி, 5000 வார்த்தைகளில் எழுதினால் போடமாட்டார்கள்.

A.S. Pannerselvan 40, 50களில் புத்தகங்கள் இல்லை. பத்திரிகைகள் தான் கருத்துகளைப் பரப்புவதற்கு அடிப்படையான விஷயம். ஆனால் இன்றைக்கு அத்தகைய கருத்துகள் அடங்கிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு சராசரி மனிதர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார். கருத்துகள் புத்தகங்களாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. இப்போதும் பத்திரிகைகள் 40, 50 காலகட்டங்களில் வெளிவந்ததைப் போல் வரவேண்டிய அவசியமில்லை.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வட இந்தியத் தொலைக்காட்சிகள் அலறிக்கொண்டிருக்கின்றன. இதை நம்முடைய தொலைக்காட்சிகள் எதிர்கொள்வதில்லையே?

பிரச்சனையின் தளம் இங்கில்லாதபோது நாம் ஏன் அதை எதிர்கொள்ள வேண்டும்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு ஒரு பிரச்சனையே கிடையாது. இங்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜெயலலிதா, இல.கணேசன் கூட பேசிவிட முடியாது. டெல்லிவாழ் உயர்குடிகளின் பிரச்சனை அவர்களைச் சார்ந்திருக்கிற மீடியாவுக்குப் பிரச்சனை. அதனால்தான் அவை அப்படி அலறுகின்றன.

இடதுசாரி இயக்கங்கள் புதிதாக வரும் தொண்டர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. ஆனால் திராவிட அரசியல் கட்சிகள் பெரியாரை சுவரொட்டியில் மட்டும்தானே பயன்படுத்துகிறார்கள். அவரின் கருத்துகளை தொண்டர்களிடம் ஏன் கொண்டு செல்வதில்லை?

இடதுசாரிகள் கட்சித்தொண்டர்களுக்கு வகுப்புகள் எடுத்தும் கட்சி இன்னும் வளரவில்லையே? அதேநேரத்தில் இடதுசாரி சிந்தனை உடையவர்கள் நாட்டில் குறையவும் இல்லை. இதற்குக் காரணம் கட்சியைய் தாண்டி இடதுசாரி இயக்கம் பரவியிருக்கிறது.

இயக்கம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் அதை கட்சிக்குள் தேட வேண்டிய அவசியமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மு.ராமசாமியின் ‘கலகக்காரத் தோழர் பெரியார்’ நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்திற்கு வந்ததில் முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

சத்யராஜ் என்ற நடிகர் சம்பளம் வாங்காமல் பெரியார் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்? பெரியார் படம் எப்படி வெற்றிகரமாக ஓடியது? தமிழ் சினிமாவில் பார்ப்பன முகத்தோடு வருகிற மாதவனோ, அர்விந்தசாமியோ வெற்றிபெறுவதே இல்லை. விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்தியராஜ், விஜய் என நம்மைப் போன்றவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராக, சேது கால்வாய் திட்டத்திற்கு எதிராக இங்கே எந்த ஒரு போராட்டமும் நடைபெறுவதில்லை.

இந்த மாற்றம் எங்கேயிருந்து வந்தது? ஒரு பொதுப்புரிதல் இல்லையென்றால் இவையெல்லாம் இங்கே சாத்தியமா? பொதுப்புரிதல் ஏற்பட்டுவிட்ட பின்பு, பயிற்சி வகுப்புகள் எதற்கு?

இடதுசாரிகளின் கொள்கைகள் அந்த பொதுப்புரிதல் என்கிற தளத்துக்கே செல்லாததால் அவர்கள் வகுப்புகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

திராவிட இயக்கம் தொடக்கத்தில் இருந்தே பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் வெளியில் தெரிகிற மாதிரி பெண்கள் ஏன் உருவாகவில்லை?

எல்லா இயக்கங்களுக்கும் இந்தக் கேள்வி பொருந்தும். இன்றைக்கு இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, இந்துத்துவா தலைவி உமாபாரதி, தலித் தலைவி மாயாவதி, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தவிர குறிப்பிடும்படி வேறு பெண்கள் இல்லை. இடதுசாரி இயக்கத்திலும் குறிப்பிடும்படி பெண் தலைவர்கள் யாரும் இல்லை. இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை. ஆனால் மாறவேண்டும். எல்லா மாற்றங்களும் நம் கண்முன்னே சாத்தியமாகி வருவதைப் போல இந்த மாற்றமும் விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

08.06.08

நாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன்

.... இங்கே பதியப்பட்டது பெரியார் பேசுகிறார் tagged இல் 11:21 மாலை by பொதுசனம்

பெரியார் பேசுகிறார்

நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம். இன்றைக்கு நாம் நமக்கு அந்நியமான ஆட்சியில் அடிமையாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான மொழி, கலாச்சாரம், நாகரிகம், உணவு, உடைப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த அவமானமும், கொடுமைகளும் போக்கப்பட வேண்டும் என்று நான் தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன்.

Periyar நான் கடுமையாகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். நான் கடுமையாகப் பேசாமல் வேறு என்ன செய்வது? எப்படியாவது அவனுக்கு ரோஷ உணர்ச்சி, மான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திருத்த வேண்டும் என்பதுதான் எனது தொண்டுமுறை. பட்டைப் போட்டவனை அசல் மடையன் என்று சொல்கிறேன்; நாமம் போட்டவனைஎல்லாம் பார்ப்பனனின் இழிமக்கள் என்று கூறுகிறேன். ஆதாரம் இல்லாமலா கூறுகிறேன்? இந்த நாட்டு ராஜாக்களின் பெண்டாட்டிகள் எல்லாம் பார்ப்பானிடம் படுத்துப் புரண்டு இருக்கிறார்கள். அப்படிப் போவது புண்ணியமாகக் கருதப்பட்டு இருந்தது.

கேரளத்திலே நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலே ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறானே! நாயருக்குப் பிறந்ததாகக் கூறினால் அவமானம்; நம்பூதிரிக்குப் பிறந்தவர் என்று கூறினால் வெகுமானம். அந்த நிலைமை அங்கு இருக்கிறதே! எப்படி எல்லாம் நம் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கடவுளை கற்பித்தவனை முட்டாள் என்று சொல்லுகிறேன் என்று ஆத்திரப்படுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்களை உங்கள் சாஸ்திரத்தில் எவ்வளவு வசைபாடி இருக்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவனின் பெண்டாட்டியை கற்பழிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானே வசைபாடியது மட்டுமல்ல கொலையே செய்து இருக்கிறார்களே!

இன்றைய அரசமைப்புச் சட்டத்திலிருந்து உங்கள் இந்து மத ஆதாரங்கள் அனைத்திலும் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பான், முஸ்லிம், கிறித்துவன் இவர்களைத் தவிர்த்து பாக்கி அத்தனைப் பேரும் சூத்திரர்கள் தானே! வெட்கப்பட வேண்டாமா? பார்ப்பான் ‘சர்மா’ என்ற பட்டம் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் மட்டும் ‘தாசன்’ என்ற பட்டத்திற்கே அருகதை உடையவன், தாசன் என்றால் என்ன அர்த்தம்? ‘தாசிபுத்திரன்’ என்றல்லவா அர்த்தம்? யாருக்கு ரோஷம் வருகிறது? யாருக்கு வெட்கம் வருகிறது? சொல்லுகிற எங்கள் மீது முட்டாள்தனமாக உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, உண்மையை உணர்ந்து பார்க்கவில்லையே?

சட்டத்திலேயே கூறி விட்டானய்யா, பார்ப்பானைத் தவிர அத்தனை பேரும் தாசிப்புத்திரன் என்று. சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வரியிலே என்ன கூறப்பட்டு இருக்கிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் தீண்டாமை அனுசரிக்கப்படும் என்றல்லவா எழுதி வைத்து இருக்கிறான். இது எந்த விதத்தில் நியாயம்? வெறுங்கல்லைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஒரு சாதிக்குதான் உரிமை உண்டென்றால், மற்றவன் கதி என்ன?

இதை எண்ணிப் பார்த்து மனம் புழுங்கிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டேன். மன்னார்குடி கோயிலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது என்று ஏற்பாடு செய்தேன். ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள கையொப்பம் போட்டுக் கொடுத்தார்கள். நம் முதல்வர் கலைஞர் பார்த்தார். அய்யா எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்? நானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் செய்கிறேன் என்று புது சட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

பார்த்தான் பார்ப்பான், சுப்ரீம் கோர்ட்டுக்கு படை எடுத்தான். கலைஞர் சட்டத்தைச் செல்லாது என்று தூக்கிப் போட்டுவிட்டான். நம் நிலை என்ன? பழைய கருப்பன் கருப்பனே என்ற தன்மைதான். நம்நிலைமை இப்படித்தான் நீடிக்க வேண்டுமா? நம் பிறவி இழிவுக்குப் பரிகாரமே கிடையாதா? பார்லிமெண்டைப் பொறுத்தவரை, எதிரிகளின் பலம்தான் அதிகம். அதில் பிரவேசித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்சியில் இருந்து கொண்டு நம் இழிவை ஒழிக்க முடியாது. பிரிந்துதான் ஆகவேண்டும். பிரிவினை என்று கேட்டால் ஏழாண்டு தண்டனையாம், அனுபவிப்போமே!

சட்டத்தைக் கொளுத்திவிட்டு மூன்று ஆண்டு சிறை அனுபவிக்கவில்லையா? வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள கூட்டம் 97 பேர்களை ‘தாசிபுத்திரன்’ என்று சொல்கிற அரசியல் சட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறதே என்று வெளிநாட்டுக்காரன் சிரிக்க மாட்டானா?

திருச்சியில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் பெரியார்ஆற்றிய உரை‘விடுதலை’ 6.12.1973